கிரி கணபதி
மாடித்தோட்டத்தில் குறைந்த இடவசதியிலேயே சுவையான உருளைக்கிழங்கை அறுவடை செய்யலாம். பெரிய நிலப்பரப்பு இல்லாமலேயே எளிதாக உருளைக்கிழங்கு வளர்க்கும் நுட்பங்களை இங்கே அறிவோம்.
1. முளை விட்ட தரமான உருளைக்கிழங்குகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பெரிய கிழங்குகளைக் கண்களுடன் சிறிய துண்டுகளாக நறுக்கலாம்.
2. ஆழமான குரோ பேக் அல்லது பெரிய வாளிகள் இதற்குப் பொருத்தமானவை. அடியில் நீர் வடியத் துளைகள் அவசியம்.
3. செம்மண், தென்னை நார்க்கழிவு மற்றும் மண்புழு உரம் சேர்க்கலாம். கிழங்குகள் பெரிதாக வளர மண் தளர்வாக இருக்க வேண்டும்.
4. பையின் அடிப்பகுதியில் நான்கு அங்குலத்திற்கு மண்ணை நிரப்பவும். முளைகள் மேல்நோக்கி இருக்குமாறு கிழங்குகளைப் பதித்து மூட வேண்டும்.
5. தினமும் குறைந்தது ஆறு மணிநேர வெயில் படும்படி வைக்கலாம். அப்போதுதான் செடிகள் ஆரோக்கியமாகவும் வேகமாகவும் வளரும்.
6. செடி வளர வளரத் தண்டைச் சுற்றி மண்ணைக் கொட்ட வேண்டும். இந்த முறை அதிகக் கிழங்குகள் உருவாக உதவும்.
7. மண்ணில் ஈரப்பதம் மட்டும் இருக்குமாறு நீர் ஊற்றுவது சிறந்தது. தண்ணீர் தேங்கினால் கிழங்குகள் விரைவில் அழுகிவிடும்.
8. பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை பஞ்சகவ்யா அல்லது தொழுவுரம் இடலாம். இதன் மூலம் சத்தான, பெரிய கிழங்குகள் கிடைக்கும்.
9. இலைகளில் பூச்சித் தாக்குதல் தென்பட்டால் வேப்பெண்ணெய் கரைசல் தெளிக்கலாம். இயற்கை முறை என்பதால் ஆரோக்கியத்திற்குப் பாதிப்பில்லை.
10. சுமார் மூன்று மாதங்களில் செடியின் இலைகள் மஞ்சளாகி உலரும். அதன் பின்னர் மண்ணைக் கிளறிக் கிழங்குகளை எடுக்கலாம்.
ரசாயனக் கலப்பற்ற புதிய உருளைக்கிழங்குகளை வீட்டு மாடியிலேயே உற்பத்தி செய்வது மிகுந்த மனநிறைவைத் தரும். இதை நீங்களும் முயற்சி செஞ்சி பாருங்க.