கிரி கணபதி
வாத்தின் மூக்கு... நீர்நாயின் உடல்... பீவரின் வால்... இவை அனைத்தும் கலந்த ஒரு உயிரினத்தை கற்பனை செய்ய முடியுமா? அதுதான் பிளாட்டிபஸ்!
1. முட்டையிடும் பாலூட்டி!
பிளாட்டிபஸ் ஒரு பாலூட்டி இனத்தைச் சேர்ந்தது. ஆனால், மற்ற பாலூட்டிகளைப் போல குட்டி போடாது; முட்டையிடும்! இது 'மோனோட்ரீம்' (Monotreme) என்று அழைக்கப்படுகிறது.
2. பிளாட்டிபஸ் குட்டிகளுக்குப் பால் கொடுக்கும். ஆனால், அதற்குப் பால் காம்புகள் கிடையாது. தாயின் வயிற்றுப் பகுதியில் உள்ள தோலில் இருந்து பால் வியர்வை போல சுரக்கும்; குட்டிகள் அதை நக்கிக் குடிக்கும்.
3. பார்க்கச் சாதுவாகத் தெரிந்தாலும், ஆண் பிளாட்டிபஸின் பின்னங்கால்களில் ஒரு சிறிய முள் (Spur) இருக்கும். அதில் கடுமையான விஷம் இருக்கும். இது ஒரு நாயைக் கொல்லும் அளவிற்கு ஆபத்தானது.
4. பிளாட்டிபஸ் உடலமைப்பில் இரைப்பை என்ற உறுப்பே கிடையாது. உணவுக்குழாயில் இருந்து உணவு நேரடியாகக் குடலுக்குச் சென்று செரிமானமாகிறது.
5. இவை வேட்டையாடும்போது கண்கள், காதுகள் மற்றும் மூக்கை மூடிக்கொள்ளும். பிறகு எப்படி இரை தேடும்? தன் அலகின் மூலம் இரையின் மின் அதிர்வுகளை (Electric fields) உணர்ந்து வேட்டையாடும்.
6. பிளாட்டிபஸ் குட்டிகளுக்குப் பற்கள் இருக்கும், ஆனால் வளரும்போது அவை விழுந்துவிடும். பெரிய பிளாட்டிபஸ்கள் சரளைக் கற்களை வாயில் போட்டு, அதன் மூலம் உணவை அரைத்துச் சாப்பிடும்.
7. சாதாரண வெளிச்சத்தில் பழுப்பு நிறத்தில் தெரியும் பிளாட்டிபஸ், புற ஊதா (UV) வெளிச்சத்தில் நீல-பச்சை நிறத்தில் ஒளிரும் தன்மை கொண்டது.
8. இவை நிலத்தில் நடப்பதை விட நீரில் நீந்துவதையே அதிகம் விரும்பும். ஒரு நாளைக்கு சுமார் 12 மணிநேரம் வரை நீரிலேயே இரை தேடிக் கொண்டிருக்கும்.
9. இந்த விசித்திரமான உயிரினம் ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கடற்கரை மற்றும் டாஸ்மேனியாவில் மட்டுமே இயற்கையாகக் காணப்படுகிறது.
10. பிளாட்டிபஸ் தன் வாலில்தான் உடலில் உள்ள கொழுப்பில் பாதியைச் சேமித்து வைக்கிறது. உணவு கிடைக்காத காலங்களில் இந்த ஆற்றலைப் பயன்படுத்திக் கொள்ளும்.
அறிவியலாளர்களையே குழப்பத்தில் ஆழ்த்திய பிளாட்டிபஸ், இயற்கையின் ஒரு மிகச்சிறந்த அதிசயம். அழிவின் விளிம்பில் இருக்கும் இதனைப் பாதுகாப்பது நம் கடமை.