சி.ஆர்.ஹரிஹரன்
சமையலில் நேரத்தை மிச்சப்படுத்தவும், உணவின் சுவையை அதிகரிக்கவும் இல்லத்தரசிகளுக்கு மிகவும் பயனுள்ள சில குறிப்புகள்.
இட்லி மாவில் சிறிது தேங்காய் எண்ணையில் வதக்கிய தேங்காய்த் துருவலைக் கலந்து வேகவைத்தால், சுவையான தேங்காய் இட்லி ரெடி.
வெங்காயம் வதக்கும்போது முதலில் வெறும் வாணலியில் சிறிது நேரம் வதக்கிவிட்டு பின் எண்ணைய் சேர்த்தால் சீக்கிரம் வதங்கி விடும்.
நூடுல்ஸை தண்ணீரில் வேக வைக்கும்போது, அதனுடன் ஒரு மேஜைக்கரண்டி சமையல் எண்ணையைச் சேர்த்து வேக வைத்தால் அவை ஒன்றோடொன்று ஒட்டாது.
வெந்தயக்குழம்பு கொதிக்கும்போது, இரண்டு உளுந்து அப்பளங்களைப் பொரித்து நொறுக்கிப் போட்டுக் குழம்பை இறக்கினால் வாசனையாக இருக்கும்.
பழைய சாதத்துடன் மைதா, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டுக் கலக்கி எண்ணைய் காய்ந்ததும், இந்தக் கலவையை சிறு உருண்டைகளாக கிள்ளிப்போட்டு எடுத்தால் சுவையான ரைஸ் பக்கோடா தயார்.
முட்டைக்கோஸைத் துருவி நன்றாக வதக்கி மிளகாய், உப்பு, புளியுடன் சேர்த்து அரைத்தால் சுவையான கோஸ் துவையல் ரெடி.
வெண்ணையைக் காய்ச்சி இறக்கியதும் அதில் சிறிது வெந்தயம் போட்டால் நெய் மணமாக இருக்கும்.
சமையல் எண்ணையை சூடாக்கும்போது வெற்றிலை அல்லது கொய்யா இலையைப் போட்டால் கசடு நீங்கும்.
பிரட்டுக்கு நடுவில் பன்னீர்த் துண்டு வைத்து, தோசைக்கல்லில் நெய் விட்டுப்புரட்டி எடுத்தால் சுவையோ சுவை.
கொழுக்கட்டை மேல் மாவிற்கு மாவு பிசையும்போது பால் அல்லது சிறிது வெண்ணைய் சேர்த்துப் பிசைய, வெந்ததும் கொழுக்கட்டை விரியாமல் சாஃடாக இருக்கும்.