ஆர்.ஜெயலட்சுமி
வெள்ளரிப்பழம்: உடலின் உஷ்ணத்தை தணிக்க வல்லது. பசியையும் உண்டு பண்ணும். சொறி சிரங்கு உள்ளவர்கள் இந்த பழத்தை உண்டு வந்தால் சீக்கிரம் ஆறிவிடும்.
கமலா பழம் : ரத்தத்தை விருத்தி செய்வதுடன் பித்த சம்பந்தமான பிணிகளை போக்க வல்லது. உடல் அரிப்பு இருந்தாலும் இது போக்கிவிடும்.
சாத்துக்குடி பழம்: உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுப்பதுடன் ரத்த விருத்தியையும் ஏற்படுத்தும். இதன் சாற்றை தொடர்ந்து குடித்து வந்தால் நினைவாற்றலை ஏற்படுத்தும்.
சப்போட்டா பழம் : சுண்ணாம்பு சத்தும் வைட்டமின் ஏ பி சி சத்துக்கள் நிறைந்துள்ள. இதை உண்டு நல்ல உடல் போஷாக்கை பெறலாம். ரத்த விருத்தி ஏற்படுத்தும்.
மாதுளம் பழம் : இதன் முழு பலனை அடைய இதன் முத்துக்களை நன்றாய் மென்று தின்னவேண்டும். கொட்டைகளை மெல்ல மெல்ல மெல்ல சுவை ஏற்படும். இதன் தோலை அரைத்து தயிரில் கரைத்து குடித்தால் சீதபேதி நிற்கும்.
பேரிக்காய்: இதன் மேல் தோலை நீக்காமல் சாப்பிட வேண்டும். அப்பொழுதுதான் இதன் முழு குணத்தையும் பெறமுடியும். நடப்பதற்கும் உட்காருவதற்கோ சிரமப்படுபவர்கள் இதை சாப்பிட்டு நல்ல குணம் பெறலாம்.
மாம்பழம் : வேறு எந்த பழத்திலும் இல்லாத அளவிற்கு இதில் வைட்டமின் ஏ சத்து அடங்கியுள்ளது. உடல் பலத்தை பெருக்குவதுடன் நல்ல பலத்தையும் கொடுக்கும். தொற்று நோய்க்கிருமிகளுக்கு மாம்பழச்சாறு எதிரியாகும்.
வாழைப்பழம் : இதில் கால்சியம் பாஸ்பரஸ் கந்தகம் இரும்புச்சத்து அனைத்தும் நிறைந்துள்ளன. வாழைப்பழத்தை நாள்தோறும் சாப்பிட்டு வந்தால் ரத்தம் விருத்தி அடைந்து, உடல் நல்ல பலம் பெறும்.
கொய்யாப்பழம் : மிகவும் ஊட்டம் கொடுக்கக்கூடியது. இதில் கமலா பழத்தைவிட மூன்று மடங்கு அதிகமாக சி வைட்டமின் உள்ளது. இருதய படபடப்பை சரியாக்கும்.
அன்னாசி பழம் : கிட்னியில் உள்ள கற்களை அன்னாசி பழச்சாறு கரைத்துவிடும். அன்னாசி பழ துண்டுகளை தேனில் நனைத்து பகல் உணவிற்கு பிறகு நாற்பது நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடல் நலம் பெறலாம்.
அத்திப்பழம் : மலச்சிக்கலுக்கு இது உகந்த பழம். ரத்தத்தை சுத்தப்படுத்துவதுடன் நுரையீரலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். ஜீரண சக்தி இல்லாதவர்கள் இதை அவசியம் சாப்பிட வேண்டும்.