கலைமதி சிவகுரு
எந்த உணவையும் மசாலாவாக்க மிளகாய் பயன்படுத்தப்படுகிறது. மிளகாய் உணவுக்கு இயற்கையான நிறத்தையும் தருகிறது. இந்தியாவில் எந்தெந்த மிளகாய் எங்கெங்கு பயிரிடப்படுகிறது என்றும் அவற்றின் சிறப்புகளையும் தெரிந்துகொள்வோம்.
காஷ்மீரிமிளகாய்: இது காஷ்மீரின் அருகில் உள்ள பகுதிகளில் வளர்க்கப்படுகிறது. அடர் சிவப்பு நிறத்தை கொண்டுள்ளது. இதில் அதிக காரம் இருக்காது. எந்தவொரு டிஷ் செய்தாலும் நல்ல தோற்றத்தையும், நிறத்தையும் கொடுக்கும். அதனால் இது சமையல்காரர்களின் favourite.
குண்டூர்மிளகாய் (ஆந்திரபிரதேசம்):
மிகப்பெரிய அளவில் மிளகாய் உற்பத்தி செய்யும் மாவட்டங்களில் குண்டூர் ஒன்றாகும். இது சுவையில் அதிக காரமானது. சாம்பார், சட்னி மற்றும் ஆந்திராவின் அனைத்து உணவுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
பயட்கி மிளகாய் (கர்நாடகா) : காரம் குறைவாகவே இருக்கும். காஷ்மீரி உலர் மிளகாய்க்கு மாற்றாக பயன்படுத்தப்படுகிறது. இது உடுப்பி சமையலில் முக்கிய பொருளாக உள்ளது. இதில் இயற்கையான ஊட்டசத்து இருப்பதால் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
போரியா மிளகாய் (தமிழ்நாடு): இந்த வகை காய்ந்த மிளகாய் மிதமான காரத்தன்மை கொண்டது. அவற்றின் வடிவம் மற்றும் தோற்றம் நன்றாக இருக்கும்.
சங்கேஸ்வரி (மகாராஷ்டிரா) : இது சிவப்பு நிறத்தில், மிகவும் காரமானவை. இது மகாராஷ்டிராவில் கோலாப்பூர் பகுதியில் விளைகிறது. இது முக்கியமாக கடலோர உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் கரம்மசாலா போன்ற மற்ற மசாலா பொடிகளை கலக்க பயன்படுகிறது.
மதானியா மிர்ச் (இராஜஸ்தான்): இது மிகவும் காரமான சிவப்பு மிளகாய்களில் ஒன்றாகும். எந்த உணவிற்கும் துடிப்பான நிறத்தை கொடுக்கும். ராஜஸ்தானி உணவு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது.
பூட்ஜோலோகியா (வடகிழக்குஇந்தியா): இந்தமிளகாய் 'பேய்மிளகு' என்று குறிப்பிடப்படுகிறது. 2007_ ம் ஆண்டு கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்ட உலகின் காரமான மிளகாய் ஆகும். எனவே, இது கறிகளில் மிகவும் குறைவாக பயன்படுத்தப்படுகிறது. இது அஸ்ஸாம், அருணாசல பிரதேசம் மற்றும் மணிப்பூர் போன்ற பகுதிகளில் விளைகிறது. இது ஊறுகாய், புளித்த உணவுகளில் மற்றும் அசைவ உணவு வகைகளுடனும் சேர்க்கப்படுகிறது.
பூசாஜ் வாலா மிளகாய் (குஜராத்): இது குஜராத்தின் தெற்கு பகுதியில் மெஹ்சானா மற்றும் கெடாவில் வளர்க்கப்படுகிறது. இந்தமிளகாய் 'விரல் சூடானமிளகு' என்று அழைக்கப்படுகிறது. இது உணவுக்கு மசாலா மற்றும் உண்மையான இந்திய சுவையை கொண்டு வர சுவையான குஜராத்தி உணவு வகைகளுடன் சேர்க்கப்படுகிறது.
கந்தாரி மிளகாய் (கேரளா): இந்த மிளகாய் கேரளா மற்றும் தமிழ் நாட்டில் விளைகிறது. முக்கியமாக தென்னிந்திய கறி மற்றும் உணவு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. இது கேரளாவில் 'பறவை கண்மிளகாய்' என்று அழைக்கப்படுகிறது. இது உணவுகளுக்கு நல்ல சுவையை தருகிறது. மிகவும் சிறியதாக இருந்தாலும் காரம் அதிகமானது
தானி மிளகாய் (மணிப்பூர்): இது மிகவும் கடுமையான வாசனை மற்றும் காரத்தையும் கொண்டது. இது கொல்கத்தாவிலும் வளர்க்கபடுகிறது.