சி.ஆர்.ஹரிஹரன்
இட்லிக்கான அரிசியை வெந்நீரில் ஊறவைத்து அரைத்தால் இட்லி பஞ்சு போல் இருக்கும்.
காய்கறிகளை வதக்கும்போது சிறிது உப்பு சேர்த்து வதக்கினால் சீக்கிரம் வெந்துவிடும்.
கேசரி செய்யும்போது தண்ணீரின் அளவைக்குறைத்து பால் சேர்த்துக்கொண்டால் கேசரி சுவை மிகுந்து இருக்கும்.
கட்லெட் செய்யும்போது எண்ணெயில் போட்டதும் உதிர்ந்து போகாமல் இருக்க, பிரட் துண்டுகளை தண்ணீரில் நனைத்து கட்லெட் கலவையுடன் சேர்த்துச் செய்யலாம்.
பஜ்ஜிமாவில் ஒரு ஸ்பூன் ஜீரகத்தைப் போட்டு பஜ்ஜி செய்தால் நல்ல சுவையுடன் இருக்கும் என்று மட்டுமல்லாமல் கடலைமாவினால் வரும் வாயுத்தொல்லையும் ஏற்படாது.
தோல் உரித்த உருளைக்கிழங்குகள் கெடாமல் இருப்பதற்கு, சில துளிகள் வினீகரைத் தெளித்து ஃ ப்ரிட்ஜில் உருளைக்கிழங்கை வைக்கவும்.
எந்த வகை கீரையானாலும், அதை சமைக்கும்போது, அளவுக்கு மீறி காரம், உப்பு, புளி இவற்றை சேர்த்து சமைத்தால், கீரையிலுள்ள சத்துக்கள் முழுமையாக கிடைக்காது.
உளுந்துவடைக்கு அரைக்கும்போது தண்ணீர் அதிகமாகிவிட்டதா? கவலை வேண்டாம். அதில் சிறிது பச்சரிசி மாவைத் தூவினால் தண்ணீரை அரிசி மாவு உறிஞ்சிவிடும்.
காய்கறி சாலட் செய்யும்போது ஒரு கைப்பிடி பாசிப்பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்துச் சேர்த்துக் கொள்ளுங்கள். சத்துக்கு சத்து. சுவைக்கு சுவை.
சாம்பார், கீரை, புளிப்புக்கூட்டு போன்றவற்றை கொதித்து இறக்கும் சமயம், துளி வெந்தயப்பொடி தூவி இறக்கினால் நல்ல வாசனையாக இருக்கும்.
வற்றல் குழம்பு தாளிக்க நல்லெண்ணெயை பயன்படுத்திப் பாருங்களேன். வாசனையாக இருக்கும்.