பத்மப்ரியா
தேங்காய்த் துவையல் அரைக்கும் போது, சிறிது தனியாவையும் வறுத்துச் சேர்த்தால், சுவையும் மணமும் கூடும்.
மீந்து போன தோசை மாவில் ஒரு பச்சை மிளகாயை கீறிப் போட்டு வைத்தால், மறுநாள் வரை மாவு புளிக்காமல் இருக்கும். மிளகாயின் மணமும் தோசையில் இணைந்திருக்கும்.
சின்ன வெங்காயத்தை வெயிலில் காயவைத்து எடுத்து வைத்தால், பல நாட்கள் வரை முளை விடாமல், அழுகிப் போகாமல் இருக்கும்.
மாங்காய், இஞ்சி, தக்காளி தொக்குகளில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து விட்டால், பல நாட்கள் வரை கெடாமல் இருக்கும். காரத்தின் அளவும் குறைந்து, சுவை கூடும்.
அடைக்கு அரைக்கும்போது, துவரம் பருப்புக்கு பதிலாக, கொள்ளு சேர்த்தால் வாயு பிரச்சனை வராது. மொறுமொறுப்பாகவும் இருக்கும்.
தேங்காய் துருவலை வதக்கிய பிறகு காய்கறி பொரியல்களில் சேர்த்தால், சுவை கூடும். சீக்கிரம் ஊசிப் போகாமலும் இருக்கும்.
இட்லி மிளகாய்ப் பொடியில் மிளகாயின் அளவை குறைத்து சுக்குப் பொடி சேர்த்தால், மணமாக இருக்கும். உணவும் எளிதில் ஜீரணம் ஆகும்.
கடுகு தாளிக்கும் போது வெடித்து சிதறாமல் இருக்க, சிறிது மஞ்சள் தூள் கலந்தால் போதும். கடுகு வாங்கியதும் வறுத்து வைத்து விட்டால் வெடிக்காது.
பூண்டுடன் ராகி கலந்து வைத்தால், பூண்டில் பூஞ்சை பிடிக்காமல், முளை விடாமல், கெடாமல் இருக்கும்.
வெண்டைக்காய்களின் மேல் கடுகு எண்ணெய் தடவி வைத்தால், பல நாட்கள் பசுமையாக, வாடாமல் இருக்கும்.
தக்காளிப் பழங்களை நறுக்கி, வெயிலில் காயவைத்து பொடித்து வைத்துக் கொண்டால், குழம்பு, ரசம் ஆகியவற்றிற்கு தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ளலாம்.
கருணை மற்றும் சேனைக்கிழங்கை வாங்கி ஒரு வாரம் கழித்து சமைத்தால், நாக்கு தொண்டை அரிக்காது. கிழங்கு வகைகள் வெந்த பின்பு உப்பு சேர்க்க வேண்டும். முதலிலேயே சேர்த்தால் கிழங்குகள் வேகாது.
ரவை, மைதா வைக்கும் டப்பாவில் சிறு துண்டு வசம்பை தட்டிப் போட்டால், பூச்சி, புழுக்கள் நெருங்காது.