சி.ஆர்.ஹரிஹரன்
வேகவைத்த துவரம் பருப்போ, பயத்தம் பருப்போ மீந்துவிட்டால், அவற்றை கோதுமை மாவுடன் சேர்த்து சப்பாத்தி செய்ய மிகவும் சுவையாக இருக்கும்.
செய்த சப்பாத்தி எப்போதும் சூடாக இருக்க வேண்டுமானால் அவற்றை சில்வர் பேப்பரில் சுற்றி வைத்தால் போதும்.
காய்ந்த மிளகாயை வறுக்கும் போது, மூக்கைத் துளைக்கும் நெடி வராமல் இருக்க சிறிது உப்பு போட்டு வறுத்தால் போதும்.
காய்கறிகள் வறுவல் செய்யும் போது, எண்ணெய் சூடாகும் சமயத்தில், சிறிது சர்க்கரை சேர்த்து வறுவல் செய்தால் அதன் சுவையே அலாதி தான்.
முருங்கைப் பூவை தேங்காய் எண்ணையில் வதக்கி, மோர்க் குழம்பில் போட்டு ஒரு கொதி வந்தவுடன் இறக்கினால் மோர்க் குழம்பு வாசனை ஊரைத் தூக்கும்.
இட்லி சுடும்போது மாவில் கொஞ்சம் நல்லெண்ணெய் ஊற்றி கலந்து இட்லி சுட்டால் மிருதுவாக இருக்கும்.
மிக்சர் போட்டு வைக்கும் டப்பாவில் சிறிதளவு சர்க்கரை தூவி வைத்தால் மிக்சர் சீக்கிரமாக நமத்துப் போகாது.
ஃப்ரிட்ஜில் வாசனைப் பொருட்களை வைத்தே ஆக வேண்டுமென்றால், அதனருகே இரண்டு ரொட்டித் துண்டுகளை வைக்க வேண்டும். இவை வாசனையை ஈர்த்துக்கொள்ளும்.
காலிபிளவர் வேக வைக்கும் போது வாடை வராமல் இருக்க சில சொட்டு எலுமிச்சைச் சாற்றை ஊற்றி வேக வைத்தால் போதும்.
முள்ளங்கி சாம்பார் செய்யும்போது சிறிதளவு எண்ணெயில் முள்ளங்கியை வதக்கிய பின் செய்தால் சாம்பார் மிகவும் ருசியாக இருக்கும்.
அவியல் செய்யும்போது சிலர் தயிர் சேர்ப்பார்கள். அதை கடைசியாக சேர்க்க வேண்டும். இதற்கு தாளிக்கக் கூடாது. அடுப்பில் இருந்து இறக்கி வைத்தபின் தேங்காய் எண்ணெய் ஒரு ஸ்பூன் கலந்து கிளறினால் அவியல் ருசியாக இருக்கும்.
வடகம், வற்றல் போட்டு வைக்கும் டப்பாக்களில் வெந்தயம் சிறிது போட்டு வைத்தால் சீக்கிரம் நமத்துப் போகாமல் இருக்கும்.