சி.ஆர்.ஹரிஹரன்
பிரட் மீந்து விட்டதென்றால் அதனை மிக்ஸியில் இட்டு பொடியாக்கி உப்பு, காரம், கரம் மசாலா, கொத்தமல்லித் தழை, வெங்காயம் சேர்த்துப் பிசைந்து கட்லெட்டாக எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
உருளைக்கிழங்கு போண்டா செய்வது போல, எல்லாக் காய்கறிகளையும் ஒன்றாக வதக்கவும். இதை உருட்டி கடலைமாவில் பொரித்தெடுத்தால் சுவையான வெஜிடபிள் போண்டா ரெடி.
மோர்க்குழம்பு செய்ய தேவையான அளவு புளித்த மோர் இல்லையென்றால், புளிப்பான மூன்று தக்காளிகளை மோர்க்குழம்புக்குத் தேவையான பொருட்களுடன் சேர்த்து அரைத்தால் புளிப்புச் சுவை வந்துவிடும்.
காலிஃப்ளவரை வேக வைத்துத் துண்டுகளாக நறுக்கி எலுமிச்சைச் சாற்றில் ஊற வைத்து பின்னர் கோபி மஞ்சுரியன் செய்தால் கூடுதல் சுவை கிடைக்கும்.
கொதிக்கும் நீரில் சுண்டலைப் போட்டு மூடி வைத்து, இரண்டு மணி நேரம் கழித்து வேக வைத்தால் எளிதில் வெந்து விடும்.
பிடி கொழுக்கட்டை செய்யும் பொழுது, கொதிக்கும் நீரில் நன்றாக அரிந்த கேரட், பீன்ஸ் மற்றும் பட்டாணி இவற்றையும் வேக வைத்து, ரவையையும் ஊற வைத்து, அரிசி மாவுடன் சேர்த்து வெஜிடபிள் கொழுக்கட்டை செய்யலாம்.
வடைக்கு உளுந்தை ரொம்ப நேரம் ஊற விடாமல், அரை மணி நேரம் ஊற வைத்து தண்ணீர் ஊற்றாமல் கெட்டியாக அரைத்து, உடனே வடை தட்டினால் எண்ணெய் குடிக்காமல் மிருதுவாக இருக்கும்.
தேன்குழல் செய்ய மாவு பிசையும் போது, உருளைக்கிழங்கை வேகவைத்து, அதனுடன் பிசைந்தால் தேன்குழல் சுவையாக இருக்கும்.
சிலருக்கு அப்பம் வார்த்தால் உருண்டு திரளாமல் கால், கை முளைத்தது போல் பிய்ந்து விடும். இதைத்தவிர்க்க, கொஞ்சம் சுட்ட நீரில் வெல்லத்தைக் கரைய விட்டுக்கொண்டு மாவை சேர்த்துக் கரைக்கலாம்.
கொத்துமல்லி அதிகமாகவும், மலிவாகவும் கிடைக்கும் நாட்களில் கொத்துமல்லித்தழையை உப்பு, பச்சை மிளகாய் ஆகியவற்றோடு சேர்த்து அரைத்து, வடையாக தட்டி, வெயிலில் காயவைத்து, வடகமாக செய்து கொள்ளுங்கள்.
சாதம் வடிக்கும்போது சற்று குழைந்து விட்டது போன்று தெரிந்தால், உடனே சிறிது நல்லெண்ணெயைச் சேர்த்தால் மேலும் குழையாமல் இருக்கும்.
வேக வைத்த உருளைக் கிழங்குடன் அரிசிமாவு, கடலை மாவு சேர்த்து ஓமப்பொடி பிழிந்தால் பிரமாதமான சுவையுடன் ஓமப்பொடி இருக்கும்.