சி.ஆர்.ஹரிஹரன்
காலிஃப்ளவரை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
இஞ்சிச் சாறுடன் சிறிது ஜீரகம், சிறிது மிளகுத்தூள் சேர்த்து சாப்பிட்டால் புளித்த ஏப்பம் நிற்கும்.
பீட்ரூட் ஜூஸுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் பைல்ஸ் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.
வெள்ளைப் பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து, தினமும் தோலில் தேய்த்துக் குளித்து வந்தால் தேமல் குணமாகும்.
சின்ன வெங்காயம் நான்கை எடுத்து நசுக்கி சாறு எடுத்து மிதமாக சூடு செய்து இரண்டு காதுகளிலும் இரண்டு சொட்டு விட்டால் காதுவலி நீங்கி விடும்.
வாழைப்பூவுடன் பாசிப்பருப்பை சேர்ந்துக் கடைந்து சிறிது நெய் சேர்த்து வாரம் இருமுறை உண்டு வந்தால் உடல் சூடு தணியும்.
வாரம் இரண்டு அல்லது மூன்று முறை கத்தரிக்காய் உணவுகள் சாப்பிடுவது உடல் எடையைக் குறைக்க உதவும்.
மணத்தக்காளி கீரைச்சாற்றை, பால் அல்லது இளநீருடன் பருகி வந்தால், நாள்பட்ட தோல் வியாதிகள் குணமாகி விடும்.
பிரண்டையை பசுநெய் விட்டு அரைத்து, சிறு சிறு உருண்டைகளாக்கி, காலையிலும், மாலையிலும் சாப்பிட்டு வந்தால் மூலநோய் குணமாகும்.
உணவில் அடிக்கடி முள்ளங்கி, முருங்கைக்கீரை, நெல்லிக்காய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கைகால், பாத வீக்கம் ஏற்படாது. சிறுநீர் தாராளமாக இறங்கும்.
வெங்காயச் சாற்றுடன் கடுகு எண்ணெய் கலந்து மூட்டுவலி உள்ள இடங்களில் தடவினால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.
நெல்லிக்காயை பாலில் அரைத்துப் பிழிந்து, சாறு எடுத்துக் கொதிக்க வைத்து, தேங்காய் எண்ணையில் கலந்து தலையில் தடவி வந்தால் முடி நன்றாக வளரும்.