சி.ஆர்.ஹரிஹரன்
பச்சடி செய்ய காய்கறிகள் எதுவும் இல்லையா? ஒரு பிடி மிக்ஸரைத் தயிரில் போட்டுக் கலக்கினால் சுவையான பச்சடி ரெடி.
சிறு பெருங்காயத்துண்டை மல்லித்தூள், மிளகாய்த்தூள் இருக்கும் டப்பாவில் போட்டு வைத்தால், அவை ரொம்ப நாள் கெடாமல் இருக்கும்.
பால்பாயசத்தில் கொஞ்சம் பலாச்சுளைகளை நறுக்கிப்போட்டு நன்கு பொங்கி வந்ததும் சாப்பிட்டால் பாயசம் பலாச்சுளை வாசனையுடன் சுவையாக இருக்கும்.
கொத்தமல்லி சட்னிக்கு அரைக்கும் போது, புளிக்கு பதில் ஒரு பெரிய நெல்லிக்காயை கட் பண்ணிப் போட்டு அரைத்தால், சட்னி வித்தியாசமான சுவையில் இருக்கும்.
தோசை மிளகாய்ப் பொடியில் கறுப்பு எள்ளும், கறுப்பு உளுத்தம் பருப்பும் வறுத்துச் செய்தால், மிளகாய்ப் பொடியின் மணமும், சுவையும் கூடுதலாக இருக்கும்.
கட்லெட் செய்யும்போது உருளைக்கிழங்குக்கு பதில் சேனைக்கிழங்கை வேக வைத்துப் பிசைந்து செய்து பாருங்கள். மிகவும் சுவையாக இருக்கும்.
பொரி உருண்டை மற்றும் வேர்க்கடலை உருண்டைகள் செய்யும் போது வெல்லப்பாகில் சிறிது இஞ்சிச் சாறு சேர்த்துக் கொண்டால் டேஸ்ட் பிரமாதமாக இருக்கும்.
இரு பிரட் துண்டுகளுக்கு இடையே மசாலா சேர்த்து வேக வைத்த நூடுல்ஸ் பரப்பி டோஸ்ட் செய்தால், சுவையான, வித்தியாசமான டோஸ்ட் ரெடி.
எலுமிச்சை சாதம் செய்யும்போது, எண்ணெயில் மஞ்சள் பொடி போடுவதை விட உப்பு, எலுமிச்சைச் சாறு, மஞ்சள்பொடி இவை மூன்றையும் பச்சையாகக் கலந்து, பிசைந்தோமானால் எலுமிச்சை சாதத்துக்கு நல்ல நிறம் கிடைக்கும் என்று மட்டுமல்லாமல், கூடுதல் வாசனையாகவும் இருக்கும்.
ஒரு கப் சாதத்தை மிக்ஸியில் கூழாக அரைத்து, அதனுடன் ஒரு கப் இட்லிமாவு கலந்து ஒரு கரண்டி தேங்காய்ப் பால், சிட்டிகை சோடா மாவு கலந்து ஊற்ற சுவையான திடீர் ஆப்பம் தயார்.
கலந்த சாதம், பிரியாணி போன்றவை பொலபொலவென்று இருக்க, குக்கர் மூடியை திறந்தவுடன் சிறிது எலுமிச்சை ஜூஸை வீட்டுக் கிளறிவிடவும். சாதம் ஒற்றை ஒற்றையாக இருக்கும்.
முட்டைக்கோஸை எப்படிச் சமைத்தாலும் ஒரு வித வாசனை வரும். கடுகுக்குப் பதிலாக சீரகம் போட்டுத் தாளித்துப் பாருங்கள். முட்டைக்கோஸின் வாசனை அறவே நீங்கி விடும்.