நான்சி மலர்
ஜிலேபி இந்தியா, ஆப்பிரிகா போன்ற நாடுகளில் மிகவும் பிரபலமான இனிப்பு சிற்றுண்டியாக இருக்கிறது. பண்டிகை காலங்களில் அதிகமாக செய்யப்படும். கோதுமை மாவை பயன்படுத்தி செய்யப்படும் இந்த இனிப்பை சர்க்கரை பாகில் ஊற வைத்து எடுப்பார்கள். இது ஆரஞ்ச் மற்றும் மஞ்சள் நிறத்தில் பார்ப்பதற்கு பிரகாசமாக சாப்பிட தூண்டக்கூடியதாக இருக்கும்.
சமோசா உலகம் முழுவதும் பிரபலமான இந்திய ஸ்நாக்ஸ் வகையில் ஒன்றாகும். முக்கோண வடிவில் இருக்கும் இதன் உள்ளே உருளைக்கிழங்கு போன்ற மசாலாக்களை ஸ்டப் செய்து பொரிக்கப்பட்டிருக்கும். இப்போதும் தெருவோர கடைகளில் விற்கப்படும் சிற்றுண்டி சமோசா சட்னியுடன் பரிமாறப்படும்.
தோசை தென்னிந்தியாவில் தோன்றிய உணவாகும். ஆனால், தற்போது உலகம் முழுவதும் இதற்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். இது அரிசி மற்றும் உளுந்து ஆகியவற்றை அரைத்து புளிக்க வைத்த மாவில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதன் 'மொறு மொறு' சுவை நம்மை அடிமையாக்கிவிடும்.
உலகளவில் பிரபலமான இந்திய உணவுகளில் பிரியாணிக்கு எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு. பாஸ்மதி அரிசி, மசாலாக்கள், இறைச்சி போன்றவற்றை சேர்த்து செய்யப்படுகிறது. பிரியாணி அதன் சுவை மற்றும் நறுணத்திற்கு பெயர் போனதாகும்.
'முர்க் மக்கானி' என்று டெல்லியில் தோன்றி உலகம் முழுவதும் பிரபலமான பட்டர் சிக்கனை ருசிக்காதவர்கள் இருக்க முடியாது. கோழி, இறைச்சியை தயிர் மற்றும் மசாலா பொருட்களில் ஊறவைத்து பாரம்பரிய களிமண் அடுப்பில் சமைக்கப்படுகிறது. பட்டர் சிக்கன் இந்தியாவின் பிரபலமான அசைவ உணவுகளில் ஒன்றாகும்.
பட்டர் கார்லிக் நாண், மாவு, ஈஸ்ட், தயிர், தண்ணீர் ஆகியவை சேர்த்து செய்யப்பட்டிருக்கும். இது பாரம்பரிய களிமண் அடுப்பில் சமைக்கப்பட்டு வெண்ணெய் மற்றும் பொடியாக நறுக்கிய பூண்டை தடவி பரிமாறப்படும்.
உலகின் நான்காவது சிறப்பான மதிப்பீடு பெற்ற சிக்கன் உணவில் 'சிக்கன் டிக்கா மசாலா' இருக்கிறது. இங்கிலாந்தில் இது தேசிய உணவாக கருதப்படுகிறது. இந்த உணவு அதன் கிரீமி சுவைக்கும், மசாலாவின் நறுமணத்திற்கும் பெயர் பெற்றது.
இந்தியாவின் மிகவும் பிரபலமான இனிப்பு வகையில் குலாப் ஜாமுனுக்கு தான் முதல் இடம். உருண்டையாக உருட்டப்பட்ட மாவை பிரவுன் நிறத்தில் வறுத்து அதை சுகர் சிரபில் ஊற வைக்க வேண்டும். மென்மையான உட்புறமும், மொறு மொறு வெளிப்புறத்தையும் கொண்ட சுவையான இனிப்பாக அனைவராலும் விரும்பி உண்ணப்படுகிறது.
இது உலகளவில் 14 ஆவது சிறந்த தெரு உணவாக பட்டியலிடப்பட்டிருக்கிறது. இது கடலைமாவு, நெய், சர்க்கரையை வைத்து செய்யப்படுகிறது. மைசூர் பாக் வாயில் வைத்தால் கரையக் கூடியதாக மென்மையாகவும், சுவையாகவும் இருக்கும் இனிப்பு.
இந்தியாவில் மேற்கு வங்காளத்தில் தோன்றிய பிரபலமான இனிப்பு ரசகுல்லாவாகும். பாலாடைக்கட்டிகளை மேன்மையான மாவாக பிசைந்து உருண்டைகளாக ஆக்கப்படுகிறது. இதை சர்க்கரை பாகில் ஊற வைக்கும் போது பஞ்சு போன்று விரிவடைந்து பெரிதாகிறது. பார்ப்பதற்கு வெண்மையான நிறத்தில் அழகாக இருக்கும் இனிப்பு வகையாகும்.