ஆர்.ஜெயலட்சுமி
சமையல் என்பது ஒரு கலை மட்டுமல்ல, அது ஒரு அறிவியல் பூர்வமான செயலும் கூட. நீங்கள் சமையலில் கில்லாடியாக மாற விரும்பினால், சில அடிப்படை நுணுக்கங்களை தெரிந்து கொள்வது அவசியம்.
சமைக்கத் தொடங்குவதற்கு முன்பே தேவையான பாத்திரங்களைத் தேய்த்து, அரிசி, பருப்பு மற்றும் தண்ணீரைத் தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
மிளகாய் அரைத்த பிறகு கைகளில் எரிச்சல் ஏற்பட்டால், கையில் சிறிது எண்ணெய் தடவிப் பிறகு கழுவினால் எரிச்சல் நீங்கும்.
மறுநாள் சமையலுக்குத் தேவையான காய்கறிகளை முதல் நாள் இரவே நறுக்கி வைப்பதன் மூலம் சமையல் வேலையை விரைவாக முடிக்கலாம்.
காய்கறிகளை அழுகும் வரை தேக்கி வைக்காமல், தேவையான அளவு மட்டும் வாங்க வேண்டும். வெங்காயம், கிழங்கு போன்றவற்றை காற்றோட்டமான இடத்தில் பரப்பி வைக்க வேண்டும்.
காய்கறிகளைச் மிகச் சிறியதாக நறுக்குவதை விட, சற்றுப் பெரிய துண்டுகளாக நறுக்குவது அவற்றில் உள்ள சத்துக்கள் அழியாமல் இருக்க உதவும்.
காய்கறிகளின் தோலுக்கு அடியில்தான் அதிக உயிர்ச்சத்துக்கள் இருப்பதால், தோலைச் சீவாமல் சமைப்பதே சிறந்தது. தேவைப்பட்டால் மட்டும் மேலோட்டமாகச் சீவலாம்.
கத்தரிக்காய், வாழைக்காய் போன்றவை நறுக்கியவுடன் கருக்காமல் இருக்க அவற்றைச் சாதாரணத் தண்ணீரிலும், வாழைப்பூ மற்றும் வாழைத்தண்டு ஆகியவற்றை மோர் கலந்த நீரிலும் போட்டு வைக்க வேண்டும்.
காய்கறிகளை நறுக்குவதற்கு முன்பே நன்றாகக் கழுவ வேண்டும். பூச்சிகள் இருந்தால் அந்தப் பகுதியை நீக்கிவிட்டு மீண்டும் சுத்தப்படுத்த வேண்டும்.
கீரைகளில் பூச்சி, புழுக்கள் இருக்க வாய்ப்புள்ளதால், முதலில் தண்ணீரில் நன்றாக அலசிவிட்டு, பின்னர் கவனமாக ஆய்ந்து சமைக்க வேண்டும். குறிப்பாக முருங்கைக் கீரையில் உள்ள கம்பளிப்பூச்சிகளைச் சுத்தமாக நீக்க வேண்டும்.
சமைத்த உணவை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தினால் அதில் உள்ள சத்துக்கள் அழிந்துவிடும். எனவே, குழம்பு போன்றவற்றைச் சூடுபடுத்தாமல் அப்படியே சாப்பிடுவது நல்லது.
தோட்டத்தில் கிடைக்கிறது என்பதற்காகத் தினமும் ஒரே காய்கறியைச் சமைக்கக் கூடாது. சுவை மற்றும் ஆரோக்கியத்திற்காகப் பல்வேறு வகையான காய்கறிகளைச் சமைக்கப் பழக வேண்டும்.
வாழைப்பூ, வாழைத்தண்டு நறுக்கும்போது கைகளில் கறை படியாமல் இருக்கச் சிறிதளவு எண்ணெய் தடவிக்கொள்ளலாம்.
பண்டிகை காலங்களில் அதிக எண்ணெய் உணவுகளைச் சாப்பிடும்போது, அதற்கேற்றவாறு எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.