பத்மப்ரியா
கருணைக்கிழங்கை நறுக்கும்போது கை அரிப்பை தடுக்க, சிறிது புளியை கையில் தடவிக்கொண்டால் போதும். புளிக்கரைசல் கலந்து வேகவைத்தால், தொண்டை அரிக்காது.
அரிசியில் வாடை வந்தால், தண்ணீர் விட்டு களைந்துவிட்டு, சிறிது எலுமிச்சைசாறு கலந்த வெந்நீரில் 5 நிமிடம் ஊற வைத்தால், வாடை போய்விடும்.
இட்லிக்கு அரைத்த மாவில் ஒரு கப் புளித்த மோர் கலந்து வைத்தால், மாவு சீக்கிரம் புளித்துவிடும்.
குழம்பு வடகத்துடன் புளி, மிளகாய், உப்பு சேர்த்து உப்பு கலந்து அரைத்தால், சுவையான திடீர் வடகத்துவையல் தயார்.
இரண்டு பங்கு பச்சரிசியும், ஒரு பங்கு புழுங்கல் அரிசியும் சேர்த்து மாவாக்கி புட்டு செய்தால், புட்டு பூ போல உதிரும். மிருதுவாகவும் இருக்கும்.
தேங்காய் சட்னி செய்யும்போது, புளிக்கு பதிலாக மாங்காய் அல்லது எலுமிச்சம் பழம் பிழிந்து செய்தால் சுவையாக இருக்கும்.
இட்லி மிளகாய் பொடி அரைக்கும்போது மிளகாயை குறைத்து, சுக்குப் பொடி சேர்த்து அரைத்தால், மணமும் கூடும். உடலுக்கும் நல்லது.
துருப்பிடித்த இரும்பு கத்திகளின் மீது சிறிது உப்பைத் தூவி துணியால் அழுத்தி தேய்த்தால் துரு நீங்கிவிடும். வெங்காயத்தை நறுக்கி தேய்த்தாலும் துரு போய்விடும்.
முளைகட்ட வேண்டிய தானியங்களை எட்டு மணிநேரம் ஊறவைத்துவிட்டு, நீரை வடித்து, ஹாட் பாக்ஸில் போட்டு மூடி, மறுநாள் திறந்து பார்த்தால் அழகாக முளைவிட்டிருக்கும்.
உப்பு ஜாடியில் ஈரக்கசிவு ஏற்படாமல் தடுக்க, அதில் சிறிது அரிசியைப் போட்டு வைத்தால் போதும்.