ஆதிரை வேணுகோபால்
இதோ... அதோ என்று கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்த
மழை பெய்ய ஆரம்பித்துவிட்டது. மழைக்கான சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்துவிட்டு, மழைக்கு 'வார்ம் வெல்கம்' சொல்லலாமா!
வெளியில் சென்று மழையில் நனைந்துவிட்டு வீட்டிற்கு வரும்போது... வாயிற்படியிலேயே ரெயின்கோட்டை கழட்டி வைத்துவிட்டு, நல்ல தண்ணீரில் கால்களை அலம்பி உள்ளே வரவும்.
படுக்கையறை கட்டிலின் அருகே ஒரு துணி மிதியடி போட்டு வைக்கவும். படுக்கையிலே ஏறும்முன் கால்களை அதில் துடைத்துக்கொண்டால், ஈரம் பட்டு நமத்துப்போகாமல் படுக்கை 'நீட்'டா இருக்கும்.
தீபாவளி சமயம் மொட்டை மாடியில் இலைகளும் சருகுகளும் விழுந்து இருக்கும். கொஞ்சம் மழை பெய்தால் போதும். அவை அனைத்தும் டிரைனேஜ் குழாயை அடைத்துக்கொள்ளும். ஆகவே தயவு செய்து முதலில் மொட்டை மாடியை சுத்தப்படுத்துங்கள்.
மொட்டை மாடியில் பூந்தொட்டிகள் வைத்திருந்தால் அவற்றை நகர்த்தி, ஈர மண்ணை பெருக்கி தொட்டியை நன்கு சுத்தமாக துடைத்து வையுங்கள். பூச்சி, வண்டுகள் வராமல் இருக்கும். (முக்கியமாக குட்டி குட்டி பூரான்கள் இச்சமயத்தில் வருவதற்கு வாய்ப்பு உண்டு)
வீட்டின் மரக் கதவுகள் ஜன்னல்கள் மற்றும் ஃபர்னிச்சர் எல்லாம் கொஞ்சம் மண்ணெண்ணெய் தொட்டு துடைக்க எறும்பு மற்றும் பூச்சிகள் வருவதைத் தவிர்க்கலாம்.
மழை நேரம் பிள்ளைகளும் கணவரும் ஜீன்ஸ் அணிவதை தவிர்க்கச் சொல்லவும். மழைக்காலத்தில் துவைத்து, காயவைப்பது மிகவும் கடினம்.
அதுபோல நீங்களும் காட்டன் புடவைகள் உடுத்துவதை தவிர்ப்பது நலம். அதுவும் கஞ்சி போட்டது என்றால் வேண்டவே வேண்டாம். கஞ்சி சரியாக காயவில்லை என்றால் துர்நாற்றம் வீசும்.
குடை, மெழுகுவர்த்திகள், தீப்பெட்டி, ரெயின்கோட், வண்டிக்கவர்கள், டார்ச்லைட்... இவை எல்லாம் கைக்கு எட்டும் தூரத்தில் இருப்பது நலம்.
மழைக் காலங்களில் உணவில் நிறைய மிளகு சேர்த்துக்கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.
இக்காலகட்டத்தில் தண்ணீர் மூலமே பல வியாதிகள் ஏற்படுகின்றன. எனவே, எப்பொழுதும் காய்ச்சிய நீரையே குடிப்பது நல்லது.
தண்ணீர் கொதிக்கும்பொழுது கிராம்பு அல்லது சீரகம் போட்டு அதை குடித்து வந்தால் மிகவும் நல்லது.
பாத்ரூமிலேயே சின்னதாக ஒரு கொடி கட்டிக்கொண்டால் துணி துவைத்தவுடன் அந்தக் கொடியில் துணிகளை தொங்கவிட்டு தண்ணீர் வடிந்தபிறகு காய வைக்கலாம்.
துணிகளை (குறைந்தபட்சம் உள்ளாடைகளை மட்டுமாவது) கடைசி முறையாக அலசும்போது நன்கு கொதிக்கும் வெந்நீரில் முக்கி காயவைப்பது நல்லது. பங்கஸ் கிருமிகள் இருந்தால் அழிந்துவிடும்.
மழைக்காலத்தில் கால் விரல் நகக்கண்ணில் சேறும், சகதியும் உள்ளே போய் விரல் நகங்கள் வலி எடுக்கும். இரவு படுக்கப்போகும் முன் பக்கெட்டில் உப்பு போட்ட வெதுவெதுப்பான நீரில் சிறிது நேரம் காலை வைத்திருந்தால் அழுக்கு வெளியேறி... வலி போயே போகும்.
தினம் இரவில் பால் அருந்தும்போது மஞ்சள்தூள் சிறிதளவு மிளகுத்தூள் போட்டு குடிக்க சளி, இருமல் அண்டாது.
டீ சாப்பிடும்பொழுது இஞ்சியை நசுக்கிப்போட்டு சாப்பிட மழை நாளின் சீதோஷ்ண நிலைக்கு சுகமாய் இருக்கும்.
குழந்தைகள் விளையாட வெளியே போகத் துடிப்பார்கள் அவர்கள் உள்ளேயே விளையாடும்படி சுவாரஸ்யமான இன்டோர் கேம்ஸ் தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
மழைக் காலத்தில் நொறுக்குத் தீனிக்கு நாக்கு ஏங்கும். மழை ஆரம்பிப்பதற்கு முன்பே முறுக்கு மாவு, சீடை மாவு , பலகாரங்கள் மாவு போன்றவற்றை ரெடி செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
அடை மிக்ஸ், இடியாப்பம் மிக்ஸ், புளியோதரை மிக்ஸ், பிசிபேளாபாத் மிக்ஸ் போன்ற உலர்ந்த மாவுகளையும் ரெடி செய்து வைத்துக்கொள்ளலாம்.
இந்த சீசனில் செரிமானமும் சற்று கம்மி. அதனால் அதிக கொலஸ்ட்ரால் சேர்ந்த பொருட்கள், ஹெவியான உணவு அயிட்டங்களைத் தவிர்த்து விடுங்கள்.
அடிக்கடி சளி பிடித்துக்கொள்ளும் நேரம் இது. மிளகு, இஞ்சி, துளசி போன்றவற்றை நறுக்கி எடுத்துக்கொண்டு அதில் பால், சர்க்கரை கலந்து சுடச்சுட குடித்தால் சளியை மட்டுப்படுத்தும்.
கதவிற்கு வெளியே ஈரத்தால் பாதிக்கப்படாத ரப்பர் மிதியடியும், அடுத்து கால் வைக்கும் இடத்தில் சற்றே கனமான காட்டன் மிதியடியும் போட்டு வைப்பது நல்லது.
அலுவலகத்தில் ஒரு செட் டிரஸ் வைத்திருப்பது நலம். திடீர் மழையில் எதிர்பாராதவிதமாக நனைந்தால் இது கைகொடுக்கும்.
இப்படி சின்ன சின்ன விஷயங்களை கவனத்தில் கொண்டால் மழை சுகமான அனுபவத்தைத் தரும்.