வீட்டில் தோட்டம் அமைக்கலாம் வாங்க!

கல்கி டெஸ்க்

பூச்செடிகளைத் தரையில் வளர்க்க ஆசைப்படாமல் ஆழகிய தொட்டிகளில் வைத்து வளர்ப்பது நல்லது. செடிகளை பதியம் போடுவதென்றால் தொட்டியில் வைத்துப் பதியம் போடும்போது சிரமமிருக்காது. வீட்டில் ஏதாவது பார்ட்டி அல்லது விசேஷ காலங்கள் என்றால் தொட்டியை எளிதாகத் தூக்கி வந்து வீட்டை அலங்கரிக்கலாம்.

பூச்செடிகளைத் தொட்டியில் வைத்து வளர்ப்பதால் தண்ணீரை மிச்சப்படுத்தலாம். நிலத்தில் இருந்தால் நிலம் அதிக தண்ணீரை உறிஞ்சும். தொட்டி என்பதால் நாமே அளவாகத் தண்ணீரை ரப்பர் குழாய்களின் மூலம் பாய்ச்சலாம்.

தொட்டிகளை ஒரே வரிசையாக அடுக்கி வைக்க வேண்டும். பூக்கள் பல நிறமானவை. ஒரு நிறம் கொண்ட பூச்செடி தொட்டிகளை ஒரு வரிசையிலும், வேறு நிறம் கொண்ட பூச்செடித் தொட்டிகளை வேறு ஒரு வரிசையிலும் வைத்து அழகுபடுத்தலாம்.

பூச்செடிகளைத் தேர்ந்தெடுக்கும் போது கவனம் தேவை. வாசனை மிகுந்த மலர்ச் செடிகளாக இருப்பது நல்லது. இவை தலையில் சூடிக்கொள்ளவும், பூஜைக்கும் உபயோக இருக்கும்.

பூக்களை தினசரி பறிப்பது முக்கியம். அழகிற்காக தோட்டத்தைப் போட்டுவிட்டுப் பூக்களைப் பறிக்காமல் இருக்கக் கூடாது! மொட்டுகளை விட்டுவிட்டு மலர்ந்த பூக்களைப் பறித்தால்தான் புதிய மொட்டுக்கள் பூக்கவும், மொட்டுக்கள் மலராய் விரியவும் இயற்கை இடம் கொடுக்கும்.

கனி தரும் மரங்களை வீட்டைச் சுற்றி வளர்ப்பது சுகாதார முறையிலும் நல்லது. சில பழம் தரும் மரங்கள் நிழலும் தரக் கூடியவை. சுகாதாரமான இயற்கைக் காற்று மரங்களால் நமக்குக் கிடைக்கின்றன.

சில மரங்களின் வேர்கள் பூமிக்கடியில் ஊடுருவிப் பாய்வதால் வீட்டு அஸ்திவாரம் பாதிக்கப்படலாம். எனவே அது போன்ற மரங்களை வீட்டுக் கட்டிடத்தை ஒட்டி வைக்கக் கூடாது.

மரங்களிலிருந்து உதிரும் இலைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும் இந்த இலைகளை வீட்டின் பின்புறத்தில் சேர்த்து வைத்து மக்க வைத்தால் அது உரச் சத்தாக மாறும்.