எஸ்.மாரிமுத்து
தமிழ்நாட்டின் முதல்வராக ஐந்து முறை பதவி வகித்தவர் முன்னாள் முதல்வர் திரு.மு.கருணாநிதி அவர்கள். நாடகம், திரைப்படம், இலக்கியம், அரசியல் என பல்வேறு துறைகளில் அழியா தடம் பதித்து தமிழ் மொழி மாநில முன்னேற்றத்திற்கு பெரும் பங்காற்றியவர். அவரின் பிறந்த நாளான இன்று அவரின் சிறந்த பொன் மொழிகளை பார்ப்போம்.
'முடியுமா நம்மால்?' என்பது தோல்விக்கு முன்பு வரும் தயக்கம். 'முடித்தே தீருவோம்' என்பது வெற்றிக்கான தொடக்கம்!
நான் தாக்குதலில் தாங்கிக் கொள்ளும் பழக்கம் உள்ளவன் மட்டும் அல்ல; தாக்குதலை விரும்புபவனும் கூட... தாக்கப்பட்டால் தான் நான் கூட மெருகு பெற முடியும்!
உலகில் ஓரிருவர் சரித்திரமாகிறார்கள். ஒரு சிலர் சரித்திரத்தை உருவாக்குகிறார்கள். பலர் சரித்திரத்தில் இடம் பெறுகிறார்கள். மிகப் பலரோ இதுவும் இன்றி தரித்திரங்களாகவே மறைந்து போகிறார்கள்!
சோதனையில் தான் நமது நிழலின் வடிவம் நமக்கு தெரிகிறது. சோதனையில் தான் நமது நெஞ்சின் வலிமை நமக்கு புரிகிறது!
புத்தகத்தில் உலகை படித்தால் அறிவு செழிக்கும்! உலகத்தையே புத்தகமாய் படித்தால் அனுபவம் தழைக்கும்!
குச்சியை குச்சியால் சந்திக்க வேண்டும்... கூர் வாளை கூர்வாளால் சந்திக்க வேண்டும்!
நான் நீ என்று சொல்லும் போது உதடுகள் ஒட்டாது. 'நாம்' என்று சொன்னால் தான் உதடுகள் கூட ஒட்டும்!
ஒருவர் எத்தனை ஆண்டுகள் வாழ்கிறார் என்பதை அவர் இறந்து போன நாளில் இருந்து கணக்கிட்டு தெரிந்து கொள்ளலாம்!
ஆசைகள் சிறகுகள் ஆகலாம். அதற்காக கால்களை இழந்து விட்டு பறந்தால் பூமிக்கு திரும்ப முடியாது!
உயிரையே குடிக்க வந்த எதிரியே ஆயினும் உரிய மரியாதை அழிப்பது தான் இந்த தமிழ் மண்ணுக்கு சொந்தமான பண்பாடு!
அதிகார வர்க்கம் உள்நிறைந்த ரோஜாவாக இருக்கலாம். முள்ளம் பன்றியாக சிலிர்த்து காட்டக்கூடாது!
பாராட்டும் புகழும் குவியும் போது, குட்டையான வாசலுக்குள் குனிந்து செல்வது போன்ற அடக்கம் வேண்டும்!
மெழுகுவர்த்தியை கொளுத்தினால் அதைக் கொண்டு ஆயிரம் விளக்குகளை ஏற்ற முடியும் அறிவொளி பெற்ற ஒரு பெண்ணாலும் அது முடியும்!
உண்மையை மறைக்க முனைவது விதையை பூமிக்குள் மறைப்பது போலத்தான்!
துணிவிருந்தால் துக்கமில்லை... துணிவில்லாதவனுக்கு தூக்கமில்லை... ஓயாமல் உழைத்த ஒரு தமிழன் இங்கே ஓய்வு எடுத்துக் கொள்கிறான் என்று என் கல்லறையில் எழுதப்படும் எழுத்துக்களுக்காக நான் தவம் இருக்கிறேன்!