கண்மணி தங்கராஜ்
சங்கரன்கோவில் 2014ம் ஆண்டின் தமிழ்நாட்டின் சிறந்த நகராட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டது இந்த நகராட்சிக்கு உரிய சிறப்பாகும். மேலும், பருவகால உழவர் சந்தையில் மிகவும் பிரபலமாக சங்கரன்கோவில் நகராட்சி அமைந்துள்ளது.
2018ம் ஆண்டு சங்கரன்கோவில் நகராட்சி கல்வி மையத்திற்கு தலைமையிடமாய் செயல்படும் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. மிகப்பெரிய மற்றும் நல்ல கல்லூரிகள் இந்த நகராட்சியில் அமைந்து இருப்பதால் கல்விக்கு முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது.
நமது இந்திய தேசத்திற்கு உயிர்நாடியாக நெசவுத்தொழில் அமைந்துள்ளது.நெசவுத் தொழிலுக்கு பெருமை பெற்ற இடமாக சங்கரன்கோவில் விளங்குகிறது. அங்கு ஒரு நாளைக்கு சுமார் 80 லட்சம் மதிப்பிலான ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த ஆடைகள் அனைத்தும் பல்வேறு மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
சங்கரன்கோவிலில் வேளாண்மை தொழிலானது நெசவுத் தொழிலுக்கு அடுத்தபடியாக சிறப்பு வாய்ந்த தொழிலாக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தென்காசி மாவட்டத்தில், தென்காசிக்கு அடுத்தபடியாக பெரிய நகரமாக சங்கரன்கோவில் உள்ளது. சங்கரன்கோயிலில் உள்ள ‘சங்கர நாராயணர் கோயில்’ மிகவும் பிரசித்தி பெற்றது. இது 108 சக்தி தலங்களில் ஒன்றாகும்.
கி.பி.1022ம் ஆண்டில் ஸ்ரீ சங்கர நாராயணர் கோவில் உக்கிரப் பாண்டியன் என்னும் மன்னனால் கட்டப்பட்டது. இந்த திருத்தலத்தில் மூலவராக இறைவன் சங்கரலிங்க சுவாமி எழுந்தருளி இருக்கின்றார். இறைவி கோமதி அம்மன் எனும் திருநாமத்தோடு அருள்பாலிக்கிறார்.
ஒன்பது நிலைகளைக் கொண்ட நூற்றி இருபத்தைந்து அடி உயரமுள்ள ராஜகோபுரம் கோயில் முகப்பை அலங்கரிக்கிறது. இந்தக் கோயிலில் ஐந்து வகையான தீர்த்தங்கள் உள்ளன. அவை அக்னி தீர்த்தம், அகத்திய தீர்த்தம், சூரிய தீர்த்தம், வைரவ தீர்த்தம், கவுரி தீர்த்தம் என்பது ஆகும். இந்த கோயிலின் தல மரம் புன்னை மரமாகும்.
தென்மாவட்டங்களில் தோவாளை மலர்சந்தைக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய மலர்சந்தை சங்கரநாராயணர் திருக்கோயிலுக்கு அருகே அமைந்துள்ளது. இச்சந்தையிலிருந்து மலர்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும், கேரளா, மதுரை மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்கள் வழியாக வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
சங்கரன்கோவிலில் பிரபலமான திருவிழாக்களில் ஒன்று ஆடி தபசு. இந்தத் திருவிழாவின்போது மக்கள் தங்கள் நிலங்களில் விளைந்த விளைபொருட்களைக் கொண்டு வந்து சுவாமி அம்பாளுக்கு எதிரில் வைத்து படைப்பார்கள். இதனால் அந்த ஆண்டு விளைச்சல் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.
சங்கரன்கோவிலில் புற்று மண்ணே பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த புற்று மண் பிரசாதம் தெய்வத் தன்மையும், மருத்துவக் குணமும் கொண்டது. இது சரும நோய்களுக்கு மிகச் சிறந்த நிவாரணியாக விளங்குவது குறிப்பிடத்தக்கது.