ஆர்.வி.பதி
இயற்கையை நேசிப்பவர்கள் அவசியம் காண வேண்டிய ஒரு சுற்றுலா தலம் அந்தமான் தீவுகள். இந்த தீவைப் பற்றிய சுவாரசியமான பதினைந்து தகவல்களை நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
அந்தமான் நிகோபார் தீவுகளின் தலைநகர் போர்ட்பிளேயர். அந்தமானின் மொத்த நிலப்பரப்பு 8,249 சதுரகிலோமீட்டராகும். அந்தமானில் வங்காளம், இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகள் பேசப்படுகின்றன. துணைநிலை ஆளுநர் அந்தமான் தீவுகளை நிர்வகிக்கிறார்.
அந்தமானில் அதிகாலை ஐந்து மணிக்கே சூரியன் உதயமாகிவிடுகிறான். மாலை ஐந்து மணிக்கு சூரியன் மறைகிறான்.
அந்தமானில் பால், தயிர் அதிகம் கிடைப்பதில்லை. காரணம் மாடு வளர்ப்பு இங்கு மிகவும் குறைவு என்று கூறப்படுகிறது. வீடுகள் மற்றும் கடைகளில் பெரும்பாலும் பால் பவுடரையே பயன்படுத்துகிறார்கள்.
அந்தமானில் உணவகங்களில் சாம்பார், ரசம் போன்றவை பரிமாறப்படுவதில்லை. பெரும்பாலும் உருளைக்கிழங்கு அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. சப்பாத்தி அதிகம் கிடைக்கிறது. கடல் உணவுகள் ஏராளமாக கிடைக்கின்றன.
சாலைகள் உயர்ந்து தாழ்ந்து அமைந்திருப்பதால் மழை எவ்வளவு பெய்தாலும் நீர் தேங்குவதில்லை. சாலைகள் அகலமாகவும் நன்றாகவும் அமைந்துள்ளன. இத்தகைய சாலைகளில் பயணிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
சுற்றுலா பயணிகளுக்கு இங்கே பாதுகாப்பு அதிகம். பொதுவாக அந்தமான் தீவுகளில் குற்றங்கள் நடைபெறுவதில்லை என்று கூறப்படுகிறது. மேலும் திருட்டுக் குற்றங்களும் இங்கே நடைபெறுவதில்லை.
அந்தமான் தீவுகளில் ரயில் போக்குவரத்து ஏதும் இல்லை. இங்கே பிறந்து வளர்ந்து வேறு மாநிலத்திற்குச் செல்லாதவர்கள் ரயில்களில் பயணித்ததில்லை.
நம்மூரில் ஒரு கிரவுண்ட நிலம் என்பது 2,400 சதுர அடியைக் குறிக்கும். அந்தமான் தீவுகளைப் பொறுத்தவரை ஒரு கிரவுண்ட் நிலம் என்பது 200 சதுரமீட்டரால் கணக்கிடப்படுகிறது.
அந்தமானைப் பொறுத்தவரை ஒவ்வொரு வருடமும் அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதம் ஆகியவை சிறந்த சீசனாகும். இந்த மாதங்களில் அந்தமானைச் சுற்றிப்பார்க்கச் செல்லலாம். ஜீன், ஜீலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய நான்கு மாதங்களில் அந்தமான் சுற்றுலா செல்வதைத் தவிர்க்கலாம்.
அந்தமானில் குறைந்தபட்சம் 23 டிகிரி செல்ஷியஸ் வெப்பமமும் அதிகபட்சமாக 31 டிகிரி செல்ஷியஸ் வெப்பமும் நிலவுகிறது.
அந்தமான் தீவுகள் 22 மார்ச் 1942 முதல் 07 அக்டோபர் 1945 வரை ஜப்பானியர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.
அந்தமான் கடல்கள் பொதுவாக பச்சை நிறத்தில் காணப்படுகின்றன. மேலும் அந்தமான் கடற்கரைகளில் அலைகள் ஆர்ப்பரித்து வருவதில்லை. ஒற்றை அலையே வந்து வந்து செல்கிறது.
அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் பட்டாம்பூச்சிகள் மிக அதிக அளவில் காணப்படுகின்றன.
இந்தியாவில் உள்ள ஒரே பெரிய எரிமலை (Active Valcano) அந்தமானில் பாரென் தீவில் (Barren Island) காணப்படும் எரிமலையாகும். பாரென் தீவானது போர்ட் பிளேயரிலிருந்து 135 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
திக்லிபூர் பகுதியில் அமைந்துள்ள கல்போங்க் நதியில் நீரிலிருந்து மின்சாரம் (Kalpong Hydro Electric Project) தயாரிக்கும் நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு தலா 1750 கிலோவாட் உற்பத்தித்திறன் கொண்ட மூன்று டர்பைன் ஜெனரேட்டர்கள் அமைந்துள்ளன. மேலும் இங்கு டீசல் ஜெனரேட்டர் மட்டுமின்றி சூரிய சக்தியின் மூலமாகவும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.