நான்சி மலர்
ஊட்டி மற்றும் குன்னூர் வழியாக நீலகிரி மலைத்தொடரில் அழகிய இயற்கை மற்றும் தனிமையை ரசித்துக் கொண்டே இருசக்கர வாகனத்தில் பயணிப்பது அலாதியான இன்பத்தைக் கொடுக்கும்.
கொடைக்கானல் மலைத்தொடரில் பைக் ரைட் (Bike Ride) செய்வது இருசக்கர வாகன ஓட்டுனர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். 'மலைத்தொடரின் ராணி' என்று அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு பழனி வழியாக செல்லும் பாதையில் 21 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இதன் வழியாக இயற்கை அழகை ரசித்துக் கொண்டே செல்வது நம்மையே மெய்மறக்க செய்துவிடும்.
ஏலகிரி மலைத்தொடரில் 15 கிலோ மீட்டர் மலை மீது ஏறிச்செல்வது இருசக்கர வாகன பிரியர்களுக்கு புது அனுபவத்தை தரும். சுற்றியுள்ள பச்சை பசேல் என்று இருக்கும் இயற்கை மற்றும் மலைத்தொடர்கள் நமக்கு அமைதியைத் தரும்.
இருசக்கர வாகன பிரியர்களில் சாகச விரும்பிகள் அடிக்கடி விரும்பி செல்லக்கூடிய இடம் தான் கொல்லிமலை. இங்கே மொத்தம் 70-72 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன.
கடலோரத்தில் இருக்கும் தொன்மை வாய்ந்த மகாபலிபுரத்திற்கு ECR சாலை வழியாக பயணம் செய்து கோவில்கள், கடற்கரை, கிராமங்களை ஒவ்வொன்றாக ரசித்துக்கொண்டே செல்வது நல்ல அனுபவத்தை தரும்.
சென்னையில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் இருசக்கர வாகன பயணம் மிகவும் பிரபலமான ஒன்றாகும். கைலாசநாதர் கோவில், ஏகாம்பரேஸ்வரர் கோவில் போன்ற கோவில்களுக்கு ஆன்மீக பயணமாக சென்று பார்த்து ரசிக்கலாம்.
சென்னையில் இருந்து பாண்டிச்சேரி செல்லும் பைக் பயணம் 163 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. இதற்கு கிட்டத்தட்ட 4 மணி நேரம் ஆகும். கடற்கரை சாலை வழியாக பயணம் செய்துக் கொண்டே மகாபலிபுரம், ஆரோவில் போன்ற இடங்களை பார்வையிட்டுக் கொண்டே செல்லலாம்.
இருசக்கர வாகன பிரியர்களுக்கு மிகவும் பிடித்த இயற்கை அழகைக் கொண்ட இடங்களில் மேட்டூர் டேமும் ஒன்றாகும். தமிழ்நாட்டில் உள்ள விவசாயம், குடிநீர் தேவைகளுக்கான நீர் இங்கிருந்து செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இருசக்கர வாகனத்தில் சென்னையில் இருந்து கேரளா செல்லும் யோசனையிருந்தால், கண்டிப்பாக தேக்கடியை மிஸ் பண்ணவே கூடாது. இயற்கை எழில் கொஞ்சும் அழகை ரசித்துக் கொண்டே காபி தோட்டத்தையும் பார்வையிடலாம். இங்கு யானைகளை அதிகமாக பார்க்க முடியும்.
நீலகிரி மலைத்தொடரில் இருக்கும் மசினக்குடியில் மான், யானை, புலி, கரடி, முள்ளம்பன்றி போன்ற விலங்குகளைக் காண முடியும். காட்டிற்குள் சபாரி செல்லலாம். யானை முகாம் இங்கு அமைந்துள்ளது. யானைகளுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இருசக்கர வாகன பிரியர்களுக்கு இந்த இடம் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்ல வேண்டும்.