எஸ்.ராஜம்
திருவனந்தபுரம் அருகிலுள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் மூலவர் விக்ரகம் பலா மரத்தால் ஆனது. இங்கே சிலப்பதிகார சம்பவங்கள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகில் உள்ள திருக்கூடலை ஆற்றூரில் உள்ள ஸ்ரீ நர்த்தன வல்லபேஸ்வரர் கோவிலில், ஸ்ரீ ஞானசக்தி அம்பாள், ஸ்ரீ பராசக்தி என்று இரு அம்மன் சன்னதிகள் உள்ளன. ஞானசக்தி அம்பாள் சன்னதியில் குங்குமமும், பராசக்தி அம்மன் சன்னதியில் விபூதியும் பிரசாதமாக தரப்படுகின்றன.
திருச்சி தஞ்சை சாலையில் உள்ள வல்லம் எனும் ஊரில் கோயில் கொண்டுள்ள ஸ்ரீ ஏகௌரி அம்மன், ராகு, கேதுவின் அதிதேவதையாக திகழ்கிறாள். கருவறையில் அம்மன் இரண்டு சிரங்கள், எட்டு கரங்கள் கொண்டு பத்ம பீடத்தில், வடக்கு நோக்கி அமர்ந்தபடி காட்சி தர, அம்மனுக்கு வலப்புறத்தில் ராகுவும், இடப்புறத்தில் கேதுவும் காட்சி தருகின்றனர்.
கொள்ளிடம் எனும் ஊரில் எழுந்தருளியுள்ள அம்மன், புலியின் மேல் அமர்ந்து வருவதால் புலீஸ்வரி என்றும் அழைக்கப்படுகிறாள்.
கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலில் அன்னை லிங்க வடிவில் காட்சி தருகிறாள். அன்னையின் பின்புறம் உள்ள பஞ்சலோக விக்ரகம் ஆதி சங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மூகாம்பிகை அம்மன் அருகில் பஞ்சலோகத்தால் செய்யப்பட்ட மகாகாளி, மகா சரஸ்வதி சிலைகள் உள்ளன.
திருவேற்காடு கருமாரியம்மன் சிவக்கோலம் கொண்டு, பிறைச்சந்திரன், மூவிலை சூலம், உடுக்கை, வாள், பொற்கிண்ணம் இவற்றோடு காட்சி அளிக்கிறாள்.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள அறப்பளீஸ்வரர் கோவிலில் பார்வதி, தாயம்மை எனும் பெயருடன் அருளுகிறார். தன் மகன் முருகனை ஆசீர்வதிக்கும் கோலத்தில் காட்சி தருகிறாள்.
ஊட்டி நகர மையத்தில் உள்ள சந்தை கடை மாரியம்மன் கோவிலில் மகா மாரியம்மன், மகாகாளியம்மன் என்ற இரு அம்மன்களும் ஒரே கருவறையில் வீற்றிருக்கின்றனர். அம்மை நோய், கண் பார்வைக் கோளாறுகள் உள்ளவர்கள் இங்கு வழிபட்டால் பூரண குணம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
தஞ்சை அருகில் உள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் புற்று மண்ணாள் உருவானவள். ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை இங்கு அம்மனுக்கு தைலக்காப்பு அபிஷேகம் நடைபெறும். ஆடி மாதத்தில் அம்பாள் முத்து பல்லக்கில் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
ஈரோடு மாவட்டம் பொம்மன்பட்டியில் உள்ள மாரியம்மன் கோவிலில் இரு கோபுரங்கள் உள்ளன. இங்கு ஒரே மேடையில் பழங்காலத்தில் வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் வடிவமும், அம்மன் உருவமும் இருப்பது சிறப்பு.
திருவாரூர் மாவட்டம் வேளுக்குடியில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அம்மன் அர்த்த பத்மாசன நிலையில், அமர்ந்த காலத்தில், பஞ்சபூதங்களை தமது பாதத்தின் கீழ் அடக்கி உள்ள நிலையில் அருள்கிறாள்.
சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோவிலில் ஆடி மாதம் நடைபெறும் முளைக்கட்டு திருவிழாவில் 10வது நாளில், அம்மன் தன் தலையில் தங்கப் பாத்திரத்தில் முளைப்பாரியுடன் காட்சி தருவாள்.
கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில், துர்க்கை அம்மன் குழந்தை வடிவில், 20 கரங்களுடன், மகிஷாசுரனை வதம் செய்யும் கோலத்தில், தனி சன்னதியில் தரிசனம் தருகிறாள். மங்கள சண்டி எனும் பெயரும் இவளுக்கு உண்டு.