ஆர்.பிரசன்னா
இந்தியாவில் உள்ள பலருக்கும் தெரியாத அல்லது ஆச்சரியம் அளிக்கக்கூடிய அரிய ஆன்மீகத் தகவல்கள் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
ஆந்திர மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள வாடபல்லி தலத்தில், நரசிம்மரின் மூக்குக்கு எதிரில் தீபம் ஏற்றப்படும். அந்த தீபம் காற்றில் அசைவது போல அசையும். நரசிம்மரின் மூச்சுக் காற்று பட்டு அந்த தீபம் அசைவதாகக் கருதப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலில் அனுமன் சிலை உள்ளது. உயரம் 22 அடி. இவருக்கு சாற்றும் வடை மாலை நீண்ட நாட்களுக்கு கெட்டுப் போவதில்லை.
கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள வன்னியர் விநாயகர் கோவிலில், விநாயகரின் மடியில் குழந்தை கண்ணன் வீற்றிருப்பது சிறப்பு.
திருச்சி முசிறி சாலையில் உள்ள வேதநாராயணன் கோயிலில் அனைத்து வேதங்களையும் தலையணையாக வைத்துக் கொண்டு சயனித்திருக்கும் கோலத்தில் பெருமாள் காட்சியளிக்கிறார்.
வைத்தீஸ்வரன் கோவிலில் ஸ்தலவிருட்சம் வேப்பமரம். இந்த மரம் கிருதயுகத்தில் கடம்ப மரமாகவும், திரேதா யுகத்தில் வில்வ மரமாகவும், துவாபர யுகத்தில் வகுள மரமாகவும், இந்தக் கலியுகத்தில் வேப்ப மரமாகவும் உள்ளது.
காஞ்சி கையிலாயநாதர் ஆலய கருவறையைச் சுற்றி, மார்பாலேயே ஊர்ந்து செல்லும்படியாக ஒரு பிரகாரம் அமைந்துள்ளது. இதனை 'சொர்க்கப் பிரதட்சணம்' என்று கூறுவர்.
ஜெய்ப்பூர் செல்லும் வழியில் வேன்வீட்டா எனும் ஊரில் சனி பகவான் கோவில் உள்ளது. சனீஸ்வரர் மிகப்பெரிய உருவில் எருமை வாகனத்தில், 8 கிரகங்களுக்கு முன்னால் அமர்ந்து உள்ளார்.
மதுராவில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் மண்தான் நைவேத்தியம் செய்யப்பட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
திருச்சி உச்சிப்பிள்ளையாரை வழிபட்டு வலம் வரும் போது, ஏழாவதாக இருக்கும் பிள்ளையார், ஏழாப்பிள்ளையார் என அழைத்து காலப்போக்கில் மருவி ஏழைப்பிள்ளையார் என்றானது.