தேனி மு.சுப்பிரமணி
சாதாரண கற்களில் இருந்து வேறுபட்டுச் சிறப்பான இயல்புகளைக் கொண்டவைதான் இசைத் தூண்கள். சிற்பிகள் இசைத் தூண்களை மிகுந்த கவனத்துடன் உருவாக்கியுள்ளனர்.
இசைத் தூண்கள் செய்யப்பட்ட கற்கள் கறுப்பு, சாம்பல், சந்தன நிறம் எனப் பல்வேறு நிறச் சாயைகளைக் கொண்டவையாக இருக்கின்றன.
மதுரை, திருநெல்வேலி, ஆழ்வார்திருநகரி, கிருஷ்ணாபுரம், செண்பகராம நல்லூர், தென்காசி, திருக்குற்றாலம், சுசீந்திரம், தாடிக்கொம்பு, தாராசுரம், திருவனந்தபுரம், திருப்பதி, தாட்பத்திரி, லேபாக்சி, ஹம்பி, விஜயநகர், பெங்களூரு, சாமராஜன் பேட்டை ஆகிய ஊர்களில் உள்ள கோயில்களில் இசைத்தூண்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஐந்து இசைத் தூண்கள் உள்ளன. நடுவில் ஒரு தூணையும், அதைச் சுற்றிலும் பல்வேறு வடிவங்களைக்கொண்ட 22 தூண்களோடு கூடிய அமைப்பு கொண்டது இது. தட்டும்போது வெவ்வேறு ஸ்வரங்களைக் கொடுக்கும். வெளித்தூண்களைப் பயன்படுத்தி நவரோஸ், குறிஞ்சி போன்ற இராகங்களை இசைக்க முடியுமாம்.
திருநெல்வேலியிலுள்ள நெல்லையப்பர் கோயிலின் மணி மண்டபத்திலும், அம்பாள் சன்னிதியிலும் இரண்டிரண்டாக மொத்தம் நான்கு இசைத் தூண்கள் உள்ளன. ஒவ்வொன்றும் நடுவில் பெரிய தூணையும் சுற்றிலும் 48 சிறிய தூண்களையும் கொண்டு அமைந்தவை.
தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார் திருநகரியில் உள்ள ஆதிபிரான் கோயிலில் இரண்டு இசைத் தூண்கள் உள்ளன. இவற்றுள் ஒன்றுத் தட்டும்போது மூன்று ஸ்வரங்களை எழுப்பக்கூடிய இசைத்தூணாக அமைந்துள்ளது. மற்றொன்று, ஊதி இசையெழுப்பும் தூணாகும். இத்தூணில் உள்ள இரண்டு துளைகளில் ஒன்று சங்கின் ஒலியையும், மற்றது எக்காள ஒலியையும் கொடுக்கின்றன.
செண்பகராம நல்லூரில் உள்ள பெருமாள் கோயிலில் உள்ள இசைத்தூண் ஊதி இசை எழுப்பும் குழல் இசைத் தூண் ஆகும். இதிலிருந்தும் சங்கு, எக்காளம் ஆகிய இசைக் கருவிகளின் ஒலியைப் பெறமுடிகிறது.
சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலில் முன்னர் குணசேகர மண்டபம் என்றும், தற்போது அலங்கார மண்டபம் என்றும் அழைக்கப்படும் மண்டபத்தில் நான்கு இசைத் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றுள் வடக்குப் பக்கத்தில் அமைந்த இரண்டு தூண்கள் ஒவ்வொன்றிலும், 24 சிறிய தூண்களும், தெற்குப் பக்கத் தூண்கள் ஒவ்வொன்றிலும் 33 சிறிய தூண்களும் உள்ளன.
ஏழு சுரங்களையும் எழுப்பக்கூடியதாக இத்தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. முற்காலத்தில் இக்கோயிலைச் சேர்ந்த தேவதாசிகள் இத்தூண்களில் இசை மீட்டி நிகழ்ச்சிகளை நடத்தியதாகச் சொல்லப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தாடிக்கொம்பு சுந்தரராசப் பெருமாள் கோயிலில் விழாக்கால நிகழ்ச்சிகள் நடைபெறுகின்ற மண்டபத்தில் இசைத்தூண்கள் உள்ளன. இவை வேதம் ஓதுவது போன்ற ஒலியைத் தர வல்லவை எனச் சொல்லப்படுகிறது.
மதுரை மாவட்டம், அழகர் கோயிலில் இரண்டு இசைத்தூண்கள் உள்ளன. இங்கே நடுவில் ஒரு தூணும் அதைச் சுற்றி மூன்று அடிகள் உயரமான தூண்களும் உள்ளன. இவை தட்டும்போது ஒன்றிணைந்து ஒத்திசைவான இசையை எழுப்பக்கூடியவை.
கோயில்கள் ஒவ்வொன்றிலும் அமைந்த இசைத்தூண்கள், அக்கோயிலுக்குத் தேவையான சிறப்பு இசைகளைத் தருவதுபோல அமைக்கப்பட்டிருக்கின்றன.
இனி, இந்தக் கோயில்களுக்குச் செல்லும்போது, இசைத் தூண்கள் எங்கிருக்கின்றன? என்று கேட்டறிந்து, அந்த இசைத்தூண்களில் இசையை மீட்டி, இறைவனை வழிபட்டுத் திரும்புங்கள்...!