கே.எஸ்.கிருஷ்ணவேனி
கிளி சித்தாசிடே குடும்பத்தை சேர்ந்த பறவை. இவற்றில் சுமார் 86 இனங்களைச் சேர்ந்த 372 வகைகள் உள்ளன. ஆஸ்திரேலியாவிலும், தென் அமெரிக்காவிலும் அதிக வகையிலான கிளிகள் உள்ளன.
கிளிகள் உலகின் மிகவும் விருப்பமான செல்லப்பிராணிகளில் ஒன்றாகும். கிளிகள் வண்ணமயமானவைை, புத்திசாலித்தனமானவை மற்றும் விளையாட்டுத்தனமானவை என்பதால் சிறைபிடிக்கப்படுகின்றன.
குறிஞ்சி நிலத்திற்குரிய பறவைகள் கிளி மற்றும் மயிலாகும். குறிஞ்சி நிலம் என்பது மலையும் மலை சார்ந்த நிலமும் ஆகும்.
கிளிகள் பிரபலமான செல்லப்பிராணியாக இருக்க காரணம் அவை ஒலிகளை கற்கும், பின்பற்றும் திறன் கொண்டவை. ஆப்பிரிக்க சாம்பல் கிளிகள், அமேசான் கிளிகள் ஒலிகளை பின்பற்றுவதில் சிறந்தவை. ஒரு ஆப்பிரிக்க சாம்பல் கிளி 100 வார்த்தைகளுக்கு மேல் பேசக் கூடியது.
கிளிகள் மட்டுமே தங்கள் கால்களால் உண்ணும் திறன் கொண்ட பறவைகள். கிளிகளுக்கு ஜிகோடாக்டைல் பாதங்கள் உள்ளன. அதாவது ஒவ்வொரு காலிலும் நான்கு கால் விரல்கள் உள்ளன. இரண்டு முன்னோக்கியும் இரண்டு பின்னோக்கியும் உள்ளது. மனிதர்களைப் போன்றே உணவு பொருட்களை எடுத்து சாப்பிட இவற்றின் கால்கள் உதவுகிறது.
உலகின் மிகப்பெரிய கிளி இனமான காகபோ அருகி வரும் பறவைகளில் ஒன்று. இவற்றால் பறக்க முடியாது ஆனால் மரங்களில் ஏறும் திறன் கொண்டவை. இரண்டடி நீளம் வரை வளரக்கூடியவை.
ஒவ்வொரு வகை கிளிகளும் வெவ்வேறு ஆயுட்காலம் கொண்டவை. ஆப்பிரிக்க சாம்பல் கிளிகள் 40 முதல் 60 ஆண்டுகள் வரையிலும், அமேசான் கிளிகள் 25 முதல் 75 ஆண்டுகள் வரையிலும், தொங்கும் கிளிகள், லவ் பேர்டுகள் மற்றும் சிறிய கிளிகள் 15 முதல் 20 ஆண்டுகள் வரையிலும் வாழும்.
மரப்பொந்துகளில் வாழும் கிளிகள் பழங்கள், கொட்டைகள், பூக்கள், தேன் போன்றவற்றை உண்பதால் மகரந்த சேர்க்கைக்கு உதவுகிறது. பழங்களை உண்டு எச்சமிடுவதால் எச்சத்தில் உள்ள விதைகள் மூலம் மரங்களையும், செடிகளையும் பரப்புகிறது.
கியா என்ற பெயர் கொண்ட ஆஸ்திரேலியா கிளிகள் மாமிசம் மற்றும் அழுகியவற்றை உண்பவை.
தத்தை, வன்னி இவை இரண்டும் கிளியை குறிக்கும் வேறு பெயர்களாகும்.
கிளி செல்வத்தின் கடவுளான குபேரனுடன் தொடர்புடையதாக நம்பப்படுகிறது. எனவே இவை வீட்டிற்கு வந்தால் மகிழ்ச்சி, செழிப்பு, அமைதி பெருகும் என்ற நம்பிக்கை உள்ளது.
மஞ்சள் கொண்டை கிளி(Sulphur Crested Cockatoo)) அழகான கிளி இனமாகும். இவை ஆஸ்திரேலியா, நியூ கினியா மற்றும் இந்தோனேஷியாவில் வாழ்கின்றன. இவை தனித்துவமான மஞ்சள் முகடுக்கு பெயர் பெற்றவை. 70 ஆண்டுகள் வரை வாழ்கின்றன.
வெண்கல சிறகுகள் கொண்ட கிளி(Bronze winged parrot) தென் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட பலவண்ண நிறங்களைக் கொண்ட கிளி இனம் இவை. வெண்கல வண்ண சிறகுகள் கொண்டவை. இவை அடர் ஊதா அல்லது நீல நிறத்தில் காணப்படுகின்றன. இறக்கைகள் வெண்கல நிறமும், ஊதா நிற விளிம்புகளையும் கொண்டவை.
நீலம் மற்றும் மஞ்சள் மக்கா (Blue and Yellow Macaw) தென் அமெரிக்காவைச் சேர்ந்த பெரிய கிளி இனம் நீலம் மற்றும் மஞ்சள் மக்காா. இவை ஈரப்பதமான காடுகள் மற்றும் சதுப்பு நிலங்களில் வாழ்கின்றன. புத்திசாலி இனமான இவை மேல் பகுதி நீல நிறமாகவும், கீழ்ப்பகுதி மஞ்சள் நிறத்திலும் காணப்படும்.
ஆப்பிரிக்க சாம்பல் நிறக் கிளி(African grey) உலகின் மிகவும் புத்திசாலித்தனமான பேசும் கிளி இனம். ஆப்பிரிக்க சாம்பல் கிளிகள் ஆப்பிரிக்காவின் காங்கோவில் காணப்படுகின்றன.
நீண்ட வால் கொண்ட கிளி (Sun Parakeet) மஞ்சள், சிவப்பு, ஆரஞ்சு, நீலம் மற்றும் பச்சை வண்ணங்கள் கலந்து காணப்படுகிறது. கண்களைச் சுற்றி ஒரு வெள்ளை இணைப்பு மற்றும் இறக்கைகளில் பச்சை நிற அடையாளங்கள் உள்ளன. இளம் கிளிகள் ஆலிவ் பச்சை நிறம் கொண்டவை. ஆறு மாதங்களுக்குப் பிறகு வெவ்வேறு வண்ணங்களில் கலவையாக மாறுகிறது.
ஹயசிந்த் மக்கா( Hyacinth macaw): 40 அங்குல நீளத்துடன் உலகின் மிகப்பெரிய பறக்கும் கிளி இனமாகும். இவை நீல நிறத்தில் பெரிய மூக்குகளை கொண்டவை. மிகவும் ஆபத்தான கிளி இனம்.