சேலம் சுபா
1950களில் பாலிவுட்டின் சிறந்த நடிகையாக அனைவராலும் விரும்பப்பட்டவர் மீனாகுமாரி. அப்போதைய இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர்.
பாகிஸ்தான் பஞ்சாப்பில் இருந்து இந்தியா வந்த அலி பக்ஷா என்ற முஸ்லிமிற்கும், மேற்கு வங்கத்தில் இருந்து வந்த மஃஜபீன் பானு என்ற கிருஸ்துவ பெண்ணிற்கும் 1933ஆம் ஆண்டு பம்பாயில் பிறந்தவர்.
நடிகராக மட்டுமின்றி சிறந்த கவிஞராகவும் இருந்துள்ளார். இவரது கவிதைகள் அடங்கிய நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இவரது தந்தை தனது மூன்று மகள்களையும் நடிக்க வைக்க விரும்பி அதற்கான வாய்ப்புகளை தேடினார். பேபி மீனா எனும் பெயரில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
காதலுக்கும் இசைக்கும் முக்கியத்துவம் தந்த “பைஜு பாவ்ரா”(1952)வில் கதாநாயகியாக நடித்தார். இந்த முதல் படமே அவருக்கு நட்சத்திர அந்தஸ்தை தந்து அனைவராலும் கவனிக்கப்பட்டார்.
பிமல் ராயின் முதல் படத்தில் வெற்றி வாகை சூடிய மீனாகுமாரியை தனது அடுத்த படமான '’பரினிதா’’ (1953)விலும் நடிக்கவைத்து புகழின் உயரத்துக்கு கொண்டு சென்றார் டைரக்டர்.
இந்த இரண்டு படங்களுமே மீனாகுமாரிக்கு பிலிம்பேர் அவார்டுகளை பெற்றத் தந்தன.
பிரபலமான இயக்குனரும் கதாசிரியருமான கமல் அம்ரோஹியை சந்தித்து காதல் கொண்டார்.18 வயதான தன்னை விட 15 வயது பெரியவர் என்றாலும் அவரையே மணந்தும் கொண்டு இரண்டாண்டுகள் இரகசிய வாழ்க்கையை வாழ்ந்தார்.
ஏற்கனேவே திருமணம் ஆனவரைக் காதலித்து மணந்தாலும் அவரின் திருமண வாழ்க்கை தோல்வியையே கண்டது. அதிலிருந்து மீள அவர் மதுவை நாடினார்.
அவர் நடித்த சாகேப் பீபி அவுர் குலாம் எனும் படம் அவரின் குடிப்பழக்கம் மேலும் அதிகமாக காரணமானது.
பெங்காலி மொழியின் மிகச்சிறந்த படமாக விளங்கிய சாஹிப் பீபி அவுர் குலாம் எனும் படம் பிலிம்பேர் விருதுகளை வென்றது. இப்படத்திற்காக சிறந்த நடிகை விருதை பெற்றார் மீனாகுமாரி.
சோகங்களின் ராணி (குயின் ஆப் டிராஜிடி) என்று அழைக்கப்பட்ட மீனா குமாரியின் வாழ்க்கையும் சோகத்தில் முடிந்தது. தனது 38ஆம் வயதிலேயே குடிப்பழக்கம் காரணமாக மரணத்தைத் தழுவினார்.
1972 ஆம் ஆண்டு மார்ச் 31 ல் அவர் மறைந்தார். அவர் மறைந்து ஐம்பது வருடங்கள் ஆனாலும் இன்றும் ரசிகர்களிடையே அவருக்கான இடம் பசுமையாக உள்ளது.
மீனாகுமாரி தி கிளாசிக் வாழ்க்கை வரலாறு என்ற பெயரில் அதிகாரபூர்வமாக பல சுவாரஸ்யங்களைத் தாங்கி வந்த இவரின் சுயசரிதை அக்டோபர் 1972ல் வினோத் மேத்தா என்பவரால் எழுதப்பட்டது.