பத்மப்ரியா
முட்டைக்கோஸ், முள்ளங்கி ஆகியவை வேகும் போது ஒரு நெடி வரும். அதனால் சிலருக்கு அவற்றை சாப்பிடும் ஆசையே போய்விடும். இந்த வாடையைப் போக்க, முட்டைக்கோஸ், முள்ளங்கி வேகும்போது, அதில் ஒரு சிறிய துண்டு இஞ்சியைப் போட்டால், வாடையும் வராது. ருசியாகவும் இருக்கும்.
சின்ன வெங்காயத்தை உரிப்பதற்கு சிறிது நேரம் முன்பு நீரில் போட்டு வைத்து உரித்தால், கண்ணில் நீர் வராமல் இருப்பதோடு, உரிப்பதும் சுலபம், தோலும் காற்றில் பறக்காமல் இருக்கும்.
கோதுமை ரவா உப்புமா செய்யும் போது தண்ணீருக்கு பதிலாக தேங்காய் பால் கலந்து செய்தால், மணமும், சுவையும் கூடும். உப்புமா பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிட ஆரம்பித்து விடுவார்கள்.
சூப் செய்யும் போது, இட்லியை சிறு சிறு துண்டுகளாக ஆக்கி எண்ணெயில் பொரித்து, அதில் போட்டால் சூப் சூப்பராக இருக்கும்.
வெண்டைக்காய்களை பொடிப்பொடியாக நறுக்கி அரை மணி நேரம் வெயிலில் வைத்து எடுத்து பொரியல் செய்தால், வெண்டைக்காயில் உள்ள வழவழப்பு நீங்கிவிடும்.
தேங்காய் சட்னி செய்யும் போது சிறிது சீரகத்தையும் சேர்த்து அரைத்தால் சட்னி வாசனை கமகமவென்று இருக்கும்.
காலிஃப்ளவரை சமைக்கும் முன் வெந்நீரில் சர்க்கரை கலந்து அதனுள் அமுக்கி வைத்தால் காலிஃபிளவர் வெண்மையாக பளிச்சென்று இருக்கும். மேலும் காலிஃபிளவரில் இருக்கும் புழுக்கள் வெளியே வந்துவிடும்.
கோதுமை மாவு அரைத்தவுடன் நன்றாக சலித்து, கொஞ்சம் தூள் உப்பைக் கலந்து வைத்தால் வண்டுத் தொல்லை வரவே வராது.
உருளைக்கிழங்கு, வாழைக்காய் பொரியல்கள் செய்யும்போது, அவற்றில் மிளகாய்த் தூளுக்கு பதிலாக மிளகுத்தூள் கலந்து செய்தால், வாசனையாகவும் இருக்கும். வாய்வுத் தொல்லையும் வராது.
பச்சை கொத்துமல்லியை வெறும் சிமெண்ட் தரையில் வைத்து, ஒரு கிண்ணத்தால் மூடி வைத்தால், இரண்டு, மூன்று நாட்கள் பசுமையாக இருக்கும்.
பூரிக்கு மாவு பிசையும் போது இரண்டு மூன்று பிரெட்களை தண்ணீரில் நனைத்து மாவில் கலந்து பிசைந்தால், பூரி மொறு மொறுப்பாக வரும்.
முட்டைக்கோஸை பொடிப்பொடியாக நறுக்கி இட்லி தட்டில் வைத்து, ஆவியில் வேக வைத்து எடுத்து பொரியல் செய்தால் சுவையாகவும் இருக்கும். சத்துக்கள் வீணாகாமலும் இருக்கும்.
எலுமிச்சம் பழம் ஜூஸ் பிழியும் முன்பு, சில விநாடிகள் தணலில் வாட்டி, பின்பு ஜூஸ் பிழிந்தால் அதிகமான சாறு கிடைக்கும்.