ஆஞ்சீர் மிட்டாய்!

ஆதிரை வேணுகோபால்

தேவை: அத்திப்பழம்-அரை கிலோ, சர்க்கரை-300 கிராம், சர்க்கரை இல்லாத கோவா-100 கிராம், நெய்-150 கிராம், ஆரஞ்சு ரெட் ஃபுட் கலர்-தேவையான அளவு, மிகவும் பொடியாக நறுக்கிய முந்திரி பிஸ்தா தேவையான அளவு, தண்ணீர்-தேவையான அளவு.

முதலில் அத்திப் பழத்தை தோல் உரித்து நன்றாக மசித்துக் தனியே வைத்துக் கொள்ளவும்.

அடிகனமான வாணலியில் சர்க்கரையுடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து அதோடு மசித்த அத்திப்பழத்தைச் சேர்த்து கிளறவும்.

சர்க்கரை இல்லாத கோவா + ஃபுட் கலரையும் சிறிது ஆறிய தண்ணீரோடு கட்டியில்லாமல் கலந்து, கொதிக்கும் சர்க்கரை கலவையோடு சேர்த்து நன்றாக கிளறவும்.

இவ்வாறு கிளறும்போது நெய்யை ஊற்றி நன்கு கிளறவேண்டியது அவசியம்.

கலவை நன்றாக திக்காக(வெ) வந்தவுடன் நெய் தடவிய தட்டில் கொட்டி மேலே பொடியாக நறுக்கிய முந்திரி பிஸ்தா துண்டுகளைத் தூவி விடவும்.

சற்று ஆறியதும் துண்டுகள் போடவும். சுவையான ஆஞ்சீர்மிட்டாய் ரெடி.

பி.கு அத்திப்பழம் கிடைக்காத பட்சத்தில் உலர்ந்த அத்திப் பழங்களை வாங்கி தண்ணீரில் ஊறவைத்து பிறகு மிக்ஸியில் அடித்தும் உபயோகிக்கலாம்.