முக்கண் பெருமாள் எங்கே இருக்கிறார்!?

பொ.பாலாஜிகணேஷ்

பரங்கிப்பேட்டையில் இருக்கும் வரதராஜ பெருமாளுக்கு நெற்றிக்கண் உண்டு.

கஜேந்திர மோட்சம் பெற்ற திருத்தலமாக இத்தலம் கருதப்படுகிறது. 

இந்த பெருமாளுக்கு நெற்றிக்கண்ணும் இருப்பதால், "இருவராகிய ஒருவர்" என்ற திருநாமமும் இவருக்குண்டு.

புரட்டாசி மாதம் முழுவதும் திருப்பதி சீனிவாச பெருமாள் திருக்கோலத்தில் மூலவரான வரதராஜபெருமாள் மஞ்சள் பட்டு உடுத்தி பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

இந்த ஆலயத்தில் பக்தர்களுக்கு வழங்கப்படும் தீர்த்தம் வயிறு சம்பந்தப்பட்ட நோய்களை தீர்க்க வல்லது. 

நெற்றிக்கணோடு இருக்கும் வரதராஜ பெருமாளை வாழ்க்கையில் ஒருமுறை தரிசித்தாலும் நிச்சயம் பரமபதம் அடையலாம்.

ஒவ்வொரு வருடமும் இந்தக் கோயிலில் சித்ரா பௌர்ணமி தினத்தன்று ஸ்வாமி மாடவீதிகளில் உலா வருவது விசேஷம்.

வைகாசி மாதம் துவங்கி, ஆனி, ஆடி மாதங்கள் என ஒரு மண்டல காலம் இந்தக் கோயிலில் விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்யப்படுகிறது.

கோகுலாஷ்டமி தினத்தன்று இந்தக் கோயிலில் ஸ்வாமி புறப்பாடும், அன்று மாலை உறியடி உத்ஸவம் சிறப்பாக நடைபெறும்.

நவராத்திரி திருவிழாவின் பத்தாம் நாள் ஸ்ரீ கஜேந்திர வரதர் குதிரை வாகனத்தில் புறப்பட்டு அம்பு போட்டுவிட்டு கோயிலுக்குத் திரும்புவது வழக்கம்.