கிரி கணபதி
இன்று நாம் கடிதம் எழுதுவது முதல் கவிதை எழுதுவது வரை எல்லாவற்றுக்கும் AI-யைத்தான் நம்பியிருக்கிறோம். ஆனால், 'நமக்கு இலவசமாக உதவி செய்யும் இவற்றிடம் நமது தனிப்பட்ட டேட்டா உண்மையிலேயே பாதுகாப்பாகத்தான் இருக்கிறதா?'
1. நீங்கள் AI-யிடம் கேட்கும் கேள்விகள் அனைத்தும் அதை மேலும் புத்திசாலியாக்கப் பயிற்சியாகப் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, உங்கள் தகவல்களை அது அப்படியே தனது நிரந்தர மெமரியில் சேமித்துக் கொள்ளும்.
2. பல AI நிறுவனங்களில், பயனர்கள் டைப் செய்யும் சாட்களைச் சரிபார்க்கப் பின்னணியில் தனி மனிதர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் உங்கள் அந்தரங்க உரையாடல்களை மூன்றாம் நபர்கள் படிக்க அதிக வாய்ப்புள்ளது.
3. ஒருமுறை AI-க்கு ஒரு தகவலைக் கற்றுக் கொடுத்துவிட்டால், அதை அதன் 'மூளையிலிருந்து' அழிப்பது மிகவும் கடினம். நாளை வேறு யாராவது அது தொடர்பான கேள்வியைக் கேட்கும்போது, உங்கள் தகவலை அது லீக் செய்துவிடலாம்.
4. உங்கள் அலுவலகத்தின் முக்கிய கோடிங் அல்லது ரகசிய பைல்களைப் பிழை திருத்த AI-யிடம் ஒருபோதும் கொடுக்காதீர்கள். சாம்சங் போன்ற பல பெரிய நிறுவனங்களின் டேட்டா இப்படித்தான் சாட்ஜிபிடி வழியாகக் கசிந்தது.
5. 'முற்றிலும் இலவசம்' என்று சொல்லித் தரப்படும் எந்தவொரு AI கருவியும் உண்மையில் இலவசம் கிடையாது. அங்கு நீங்கள் கொடுக்கும் உங்கள் தனிப்பட்ட டேட்டாதான் அவர்களுக்கான மிகப்பெரிய விற்பனைப் பொருளாகும்.
6. AI-யை பாதுகாப்பாகப் பயன்படுத்த, அதன் செட்டிங்ஸில் உள்ள 'Chat History & Training' ஆப்ஷனை ஆஃப் செய்து வையுங்கள். இப்படிச் செய்தால் நீங்கள் பேசும் விஷயங்களை அது தனது பயிற்சிக்காக எடுத்துக்கொள்ளாது.
7. ஆதார் அட்டை, பான் கார்டு அல்லது வங்கிப் பாஸ்வேர்டுகளை எக்காரணம் கொண்டும் AI-யிடம் பகிரக் கூடாது. இவை சைபர் மோசடிக்காரர்களின் கைகளில் சிக்கினால் உங்கள் வங்கிக் கணக்கே சுலபமாகக் காலியாகிவிடும்.
8. உங்கள் சொந்தக் குரலையோ அல்லது புகைப்படங்களையோ AI செயலிகளில் அப்லோட் செய்யும்போது கூடுதல் கவனம் தேவை. நாளை உங்களைப் போலவே 'டீப்ஃபேக்' (Deepfake) வீடியோக்கள் உருவாக்க இந்த டேட்டா தவறாகப் பயன்படலாம்.
9. சாதாரண இலவச வெர்ஷன்களை விட, நிறுவனங்களுக்கான 'Enterprise AI' கட்டணச் சேவைகள் பல மடங்கு பாதுகாப்பானவை. அவற்றில் பயனர்களின் டேட்டாவைப் பயிற்சிக்காகப் பயன்படுத்த மாட்டோம் என்ற சட்டப்பூர்வ உத்தரவாதம் இருக்கும்.
10. AI-யிடம் எதை டைப் செய்தாலும், அதை ஒரு பொதுச் சுவரில் போஸ்டராக ஒட்டுவதாக நினைத்துக் கொள்ளுங்கள். ஊருக்குத் தெரியக்கூடாது என நினைக்கும் எந்தவொரு ரகசியத்தையும் அதன் சாட் பாக்ஸில் எழுதாதீர்கள்.
AI ஒரு மிகச்சிறந்த உதவியாளர்தான்; ஆனால் அது உங்கள் 'உயிர் தோழன்' கிடையாது. அதனிடம் எதைக் கொடுக்கலாம், எதை மறைக்க வேண்டும் என்ற விழிப்புணர்வோடு பழகினால் ஆபத்து எப்போதுமே இல்லை!