கர்ப்பிணிகள் கவனத்திற்கு!

சேலம் சுபா

கர்ப்பகாலத்தில் குறைந்தபட்சம் எட்டு மணி நேரத்தூக்கம்  கர்ப்பிணிகளுக்கு அவசியம் தேவை. கருவின் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்க இந்த நீண்ட நேர தூக்கம் தேவை.

கர்ப்பம் தரித்த பெண் புரண்டு படுத்தால் குழந்தை கொடி சுற்றிப் பிறக்கும் குழந்தைக்கு ஆகாது என்பதெல்லாம் உண்மை அல்ல. கர்ப்பிணிகள் வேகமாக புரண்டு படுப்பதோ மல்லாந்த வாக்கில் எழுவதோ நல்லதல்ல. மெதுவாக எழுந்து உட்கார்ந்து  பின் மெதுவாக ஒருக்களித்து படுக்க வேண்டும்.

பொதுவாகவே கர்ப்பிணிகள் செல்போனைத் தவிர்ப்பது நல்லது. உறங்கும் போதாவது செல்போனை அருகில் வைத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். அதிலிருந்து வெளிவரும் கதிர்கள் குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

இரவு நேரங்களில் மிதமான நடைப்பயிற்சிக்கு பின் தூங்கப்போவது நல்லது. நடைப்பயிற்சியை காலை மாலை இரவு நேரங்களில் முடிந்த அளவு மருத்துவர் ஆலோசனையுடன் கடைபிடிக்கலாம்.

இரவு படுக்கைக்குச் செல்லும் முன் வெதுவெதுப்பான அல்லது பொறுக்கும் சூட்டில் இருக்கும் நீரில் குளித்துவிட்டு உறங்கினால் ஆழ்ந்த துக்கம் கிடைக்கும்.

கர்ப்பிணிகள் குப்புறப்படுத்து உறங்குதல் ஆகாது. குப்புறப் படுக்கும்போது கர்ப்பப்பையை அழுந்துவதால் அது,  கருவில் உள்ள சிசுவை பாதிக்கும் வாய்ப்புண்டு.

மிகவும் இறுக்கமான ஆடைகளை அணிவதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். மார்பக வளர்ச்சி மற்றும் இடுப்பு பகுதிகள் விரிவடையும்போது இது போன்ற இறுக்கமான ஆடைகள் சிரமத்தை உண்டு பண்ணும்.

கர்ப்பிணிகள்  சாப்பிட்ட உடன் உறங்கச் செல்லக்கூடாது. இரவில் எளிய உணவுகளையே கர்ப்பிணிகள் எடுக்க வேண்டும். அப்போதுதான் ஜீரணம் ஒழுங்காகி உறக்கமும் நன்கு வரும்.

இரவில்    படுக்கும் முன் மிதமான சூட்டில் பால் குடிப்பது நல்ல உறக்கத்தைத் தரும். பாலில் குங்குமப்பூ பாதாம் போன்றவைகள் கலந்து குடிப்பது அவரவர் வசதிக்கேற்ப இருக்கலாம்.   

காலில் ஏற்படும் வீக்கத்திற்கும் வலிக்கும் கால்களுக்கிடையில் தலையணை வைத்து உறங்குவது நிவாரணம் தரும். கடைகளில் இதற்காகவே சிறிய வகை தலையணைகள் விற்பனைக்கு உள்ளன.