ஆண் சிங்கங்கள் வேட்டையாடுமா?

நாராயணி சுப்ரமணியன்

ஒரு காலத்தில் ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா என பல கண்டங்களில் சிங்கங்கள் பரவலாகக் காணப்பட்டன. இப்போது ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவின் கிர் வனப்பகுதி என அவற்றின் வாழிடம் சுருங்கிவிட்டது.

சிங்கங்களின் கோரைப்பல் 7 சென்டிமீட்டர் நீளம் வரை வளரக்கூடியது!

ஒரு சிங்கத்தின் கர்ஜனை 8 கிலோமீட்டர் தூரம் வரை கேட்கும் அளவுக்கு சக்தி வாய்ந்தது!

"காட்டு ராஜா" என்று பொதுவாக அழைக்கப்பட்டாலும் சிங்கங்கள் பொதுவாக புல்வெளிகளையே வசிப்பிடங்களாகத் தேர்ந்தெடுக்கின்றன.

சிங்கங்களால் மரமேற முடியும். ஆனால், சிறுத்தைகளைப் போல ஒயிலாக ஏற முடியாது, கொஞ்சம் தட்டுத்தடுமாறி மட்டுமே இவை மரம் ஏறுகின்றன.

சிங்கங்கள் கூட்டமாக வாழும் சமூக விலங்குகள். ஒரு சிங்கக்கூட்டத்தில் 4 முதல் 38 உறுப்பினர்கள் வரை இருக்கலாம். கூட்டத்துக்கு ஆண் சிங்கம் தலைமை வகிக்கும்.

சிங்கங்களால் இரவிலும் பகலிலும் எந்த வகையான வெளிச்சத்திலும் நன்றாகப் பார்க்க முடியும். இரவில் நன்றாகப் பார்வை தெரியும் என்பதால் இவை இரவுநேர வேட்டையை விரும்புகின்றன.

சிங்கக்கூட்டத்தில் பெரும்பாலும் பெண் சிங்கங்களே வேட்டையாடுகின்றன. அளவில் பெரிய விலங்குகளை வீழ்த்தவேண்டுமென்றால் மட்டுமே ஆண் சிங்கங்கள் உதவி செய்யும்.

சிங்கங்கள் ஒரு நாளைக்கு 20 மணி நேரம் வரை கூடத் தூங்கும். அதிக ஆற்றலும் கொழுப்பும் கொண்ட இரை உணவுகளை சாப்பிடுவதால் இவற்றுக்கு அடிக்கடி வேட்டையாட வேண்டிய கட்டாயம் இல்லை.

மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமான முரண், வாழிட இழப்பு, காலநிலை மாற்றம், வனவிலங்கு சந்தை ஆகியவற்றால் சிங்கங்கள் அழிந்துவருகின்றன.