யானைகளின் தும்பிக்கையில் எத்தனை தசைகள் தெரியுமா?

நாராயணி சுப்ரமணியன்

யானைகளில் மூன்று இனங்கள் உண்டு - ஆப்பிரிக்க சவானா (புல்வெளி) யானை, ஆப்பிரிக்க காட்டு யானை, ஆசிய யானை. 2000ம் ஆண்டில்தான் ஆப்பிரிக்க யானைகளில் இருவேறு தனி இனங்கள் உண்டு என்பது கண்டறியப்பட்டது.

ஒரு ஆசிய யானை 5000 கிலோ வரை வளரக்கூடியது.

யானையின் பேறுகாலம் சராசரியாக 18 முதல் 22 மாதங்கள்! இத்தனை நீண்ட பேறுகாலம் இருப்பதால்தான் அதை "கஜகர்ப்பம்" என்று தனியாகக் குறிப்பிடுகிறார்கள்.

யானைக்குட்டிகள் பிறந்த 20 நிமிடங்களில் எழுந்து நின்று விடும்! அது மட்டுமில்லாமல் பிறந்த ஒரு மணி நேரத்திலேயே நடக்கத் தொடங்கிவிடும்!

யானைகளின் தும்பிக்கைகளில் ஒரு லட்சத்தி ஐம்பதாயிரம் தசைகள் உண்டு.

யானைகளின் தும்பிக்கைகளுக்குள் எட்டு லிட்டர் தண்ணீரை வைத்துக்கொள்ள முடியும்.

ஒரு யானை சராசரியாக ஒரு நாளைக்கு 150 கிலோ உணவையும் 200 லிட்டர் தண்ணீரையும் உட்கொள்ளும்.

ஆப்பிரிக்க யானை, ஆசிய யானை இரண்டுக்குமே தோலில் சிறு மடிப்புகள் உண்டு. ஆப்பிரிக்க யானையின் உடலில் தோல் மடிப்புகள் சற்றே அதிகமாக இருக்கும். இந்த தோல் மடிப்புகள் நீரை சேமித்து உடலைக் குளிர்விக்க உதவுகின்றன.

கடந்த நூறு ஆண்டுகளில் ஆப்பிரிக்க யானைகளின் மொத்த எண்ணிக்கையில் 90% அழிந்துவிட்டது.

வாழிட இழப்பு, மனிதர்களுக்கும் யானைகளுக்குமான முரண்கள், தந்தங்களுக்காக சட்டவிரோதமாகக் கொல்லப்படுவது ஆகியவற்றால் யானைகள் அழிந்துவருகின்றன.