லோகமான்ய பால கங்காதார திலகர்! (நினைவு நாள்) ஆகஸ்ட் 01.

சேலம் சுபா

பால கங்காதர திலகர் இந்திய விடுதலைக்காக அடித்தளம் அமைத்துத் தந்தவர். இந்திய விடுதலை இயக்கத்தின் மக்கள் ஆதரவைப் பெற்ற முதல் சுதந்திரப் போராட்டத் தலைவர்.

பிறந்தது மகாராஷ்டிராவின் இரத்தினகிரி. வாழ்ந்தது விடுதலை வீரராகவும் தேசிய மற்றும் சமூகசீர்திருத்த வாதியாகவும். மறைந்தது 64ஆம் வயதில் மும்பையில்.

“தன்னாட்சி எனது பிறப்புரிமை. அதனை நான் பெறுவேன்” என்பது இவரின் புகழ்பெற்ற உரை. இன்றும் இந்த வார்த்தைகள் மக்களின் மனதில் இவரின் நினைவாக உள்ளது.

சுதந்திரம் பற்றிய விழிப்புணர்வை முதன் முதலில் மக்களிடையே எழுப்பியவர். செல்வாக்கு மிகுந்த இவர் திலக் மகராஜ் என்றும் லோகமான்ய எனும் கவுரவ பட்டத்துடனும் மக்களால் அழைக்கப்பட்டார்.

திலகரின் எழுச்சிமிகு போராட்டத்தால் ஈர்க்கப்பட்டு அவரின் சீடராக மாறிய தமிழகத்தை சேர்ந்த வ.உ. சிதம்பரம்பிள்ளை  ‘தென்னாட்டுத் திலகர்’ என்று அவரின் பெயரால் பெருமை பெற்றார்.

திலகர் தலைமையேற்று நடத்திய போராட்டங்களில் பலரும் பங்கு பெற்றாலும், அவர்களுள், மக்களிடையே ஆன்மீகத்துடன் அரசியல் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியவரான ஸ்ரீ அரவிந்தர் குறிப்பிடத்தக்கவர்.

திலகர் நண்பர்களுடன் இணைந்து 1881ல் மராட்டி மொழியில் ‘கேசரி’ மற்றும் ஆங்கில மொழியில் ‘மராட்டா' என்ற இரு பத்திரிகைகளை நடத்தினார். இரண்டு ஆண்டுகளிலேயே ‘கேசரி’ இந்தியாவின் அதிக விற்பனையான பத்திரிக்கையாக உயர்ந்தது.

இந்திய கலாச்சாரத்துடன் இணைந்த கல்வியை இளைய சமுதாயம் பெறும் நோக்கில் 1884ல் தக்காண கல்வி சபையை நிறுவி கடுமையாக உழைத்தார். பின்னாளில்அது ஃபெர்குசன் கல்லூரியாக விரிவானது.

1889ல் இந்திய காங்கிரசில் சேர்ந்தார். 1893ல் விவேகானந்தரின் சிகாகோ உரையால் பெரிதும் கவரப்பட்ட திலகர் மக்களிடையே நாட்டுப்பற்றின் ஒற்றுமையை உணர்த்த கணபதி உற்சவம் கொண்டாடினார்.

திலகரின் கணபதி உற்சவம் இன்றும் மராட்டிய மாநிலத்தின் அடையாளமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 1895ல் மாவீரர் சிவாஜியின் உற்சவத்தையும் கொண்டாடி ஆங்கிலேயருக்கு இந்திய மக்களின் ஒற்றுமையை உணர்த்தினார்.

1895ல் புனேவின் முனிசிபல் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1896ல் மும்பையில் பரவிய பிளேக் நோயினால் துன்புற்றோருக்காக தாமே மருத்துவமனை ஒன்றைக் கட்டி, அவர்களுடன் இருந்தது இன்றளவும் பேசப்படுகிறது.

சுதேசிப்பொருள்கள் ஆதரவு, அந்நியப்பொருட்கள் பகிஷ்கரிப்பு ஆகியவற்றை முன்னின்று நடத்திய திலகரின் வழிபற்றியே பின்னாளில் காந்திஜியின்  ஒத்துழையாமை இயக்கம் நடைமுறைக்கு வந்தது எனலாம்.