தயிர்ப் பச்சடிகள் பத்து!

மங்கையர் மலர்

இளம் கீரைத் தண்டைப் பொடியாக நறுக்கி, வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு. நன்கு நசுங்கும்படி வதக்கிக்கெட்டியான தயிரில் உபபுப் போட்டுக் கலக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு. பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கித் தாளிக்கவும்.

முற்றிய முருங்கை விதைகளை எண்ணெயில் நன்கு வதக்கி சீரகம், மிளகாய் வற்றல் சேர்த்து அரைத்துத் தயிரில் கலந்து உப்புப் போட்டு. கடுகு தாளித்துப் பறிமாறவும்.

சால்ட் பிரெட்டை நன்கு ரோஸ்ட் செய்து தயிரில் பிய்த்துப் போட்டு. கடுகை தாளித்துக் கலக்கவும்.

அவலை நீரில் ஊற வைத்து, தயிரில் நன்கு பிழிந்து போடவும். தேங்காய்ச் சில்லுடன், பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துத் தயிரில் கலந்து உப்பு போட்டு தாளிக்கவும்.

குருத்து எலுமிச்சை இலைகளை ஆய்ந்து, வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளவும். கடுகு, உளுத்தம்பருப்பு. மிளகாய் வற்றல், பெருங்காயம் தாளித்து, வதக்கிய எலுமிச்சை இலை சேர்த்து அம்மியில் நைசாக அரைத்துத் தயிருடன் கலக்கவும்.

ஒரு கைப்பிடி கொத்துக் கடலையைச் சிவக்க வறுத்து முந்தின நாளே நீரில் ஊற வைக்கவும். மறுநாள், வாணலியில் எண்ணெய் விட்டு, மிளகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம்,சிறிது கறிவேப்பிலை தாளித்து, கடலையுடன் சேர்த்து அரைத்து, தயிரில் உப்பு போட்டுக் கலக்கவும். கடுகைத் தனியாகத் தாளித்துக் கொட்டவும்.

ஒரு சிறிய மாகாளிக் கிழங்கைத் தோலுடன் நெருப்பில் காட்டி. எல்லாப் பக்கமும் திருப்பி வைத்துச் சுடவும். பின், தோலை நீக்கி விட்டு, இரண்டு மூன்றாக நறுக்கிக் கொண்டு அம்மியில் இரண்டு திருப்புத் திருப்பி நன்கு நசுக்கவும். உப்புப் போட்ட தயிரில் நன்கு பிசைந்து போட்டு, கடுகு, பச்சை மிளகாய் தாளித்து சுவைக்கவும்.

இரண்டு டேபிள் ஸ்பூன் கோதுமை மாவை, பொன்னிறமாக வறுத்துத் தயிருடன் வாணலியில் கலக்கவும். கொத்துமல்லித் தழை, பச்சை மிளகாய், இரண்டையும் அரைத்துத் தயிரில் கலந்து, உப்புப் போட்டு, கடுகையும் தாளித்துப் போடவும்.

பழுக்காத வாழைப்பழத்தைத் தயிரில் நன்கு பிசைந்து போடவும். வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, மிளகாய் வற்றல் கிள்ளிப் போட்டு, தாளித்துத் தயிரில் கொட்டி, பரிமாறும் போது உப்புப் போட்டுக் கலக்கவும்.

புழுங்கலரிசி, தேங்காய்த் துருவல் இரண்டையும் பொன்னிறமாக வறுத்துக் கொண்டு, அத்துடன் பச்சை மிளகாய் சேர்த்து, மையாக அரைத்து, தயிரில் உப்புப் போட்டுக் கலக்கவும். கடைசியில் கடுகு தாளித்துப் போடவும்.