சிறு தானியங்களில் இருக்கும் சத்துக்கள்!

சேலம் சுபா

கோதுமை மற்றும் பார்லியில் உள்ள குளுடன் என்கிற ஒவ்வாமை ஏற்படுத்தும் புரதம் இந்த சிறுதானியங்களில் இல்லை. அதனால் பலருக்கும் உகந்த உணவு இந்த சிறுதானியங்கள்.

வரகில் பாலிப்பினால்ஸ் என்ற ஆன்ட்டி ஆக்சிடென்ட் சத்து அதிகம் உள்ளது. புரதம், கால்சியம், போலிக் அமிலம் மற்றும் நார்ச்சத்தும் உண்டு. கிளைசெமிக் இன்டெக்ஸ் குறைவாக இருப்பதால் இது சர்க்கரை நோயாளிகளுக்கான சிறந்த உணவாகிறது. வரகினை சாதமாகவும், இட்லி, கொழுக்கட்டை, கஞ்சி ஆகவும் சாப்பிடலாம்.

திணையில்  புரதம், பி விட்டமின்கள், துத்தநாகம் இரும்பு சத்து போன்றவை நிறைத்துள்ளன. ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவினை குறைக்கும். திணையில் புலாவ், பாயாசம், கஞ்சி, புட்டு, இடியாப்பம் போன்றவற்றை செய்யலாம்.

நார்ச்சத்து அதிகமாக உள்ள சிறு தானியம் குதிரைவாலி. இதனால் சக்கரை நோய் மற்றும் இதய நோய் உள்ளவர்களுக்கு ஏற்ற உணவாகிறது.  தோசை உப்புமா ஆகியவற்றை  செய்யலாம்.

எளிதாகவும் மலிவாகவும் கிடைக்கும் கேழ்வரகில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது. 100 கிராம் கேழ்வரகில் 344 ml கால்சியம் உள்ளது உடலுக்கு தேவையான அமினோ அமிலங்களும் அன்ட்டி ஆக்சிடென்ட் சத்துக்களும் நிறைந்துள்ளன. இதில்  களி, கஞ்சி, புட்டு, கொழுக்கட்டை, அடை போன்றவற்றைத் தயாரிக்கலாம்.

வெள்ளைச் சோளத்தில் புரதம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்ஸ் நிறைந்துள்ளன. இதில் புட்டு, தோசை, அடை போன்றவற்றை தயாரிக்கலாம்.

புரதம், கால்சியம், நார்ச்சத்து நிறைந்த சிறுதானியம் கம்பு. மலச்சிக்கலை தவிர்த்து குடல் உபாதைகளை சரி செய்யும். அரிசியைவிட எட்டு மடங்கு அதிகமாக இரும்பு சத்து உள்ளது. பாலூட்டும் பெண்களுக்கு ஏற்ற உணவாகவும் இது இருக்கிறது. கம்பில் கூழ், அடை, புட்டு, கம்பு சேவை போன்ற பதார்த்தங்கள் செய்து சாப்பிடலாம் 

சாமை அரிசி வகையை சேர்ந்தது . அரிசி மற்றும் கோதுமையை விட ஊட்டச்சத்து அதிகம் நிறைந்தது. சாமை அரிசியில் எல்டிஎல் மற்றும் மொத்த கொழுப்பின் அளவைக் குறைக்கும் தன்மை உள்ளதால் இதய நோய் வருவதற்கான அபாயத்தைக் குறைக்கிறது.