மகாலெட்சுமி சுப்ரமணியன்
பொதுவாக மரம், செடி, கொடி என அனைத்தும் ஏதோ ஒரு வகையில் நமக்கு பலன் தருகின்றன. பூவாக, காயாக, பழமாக, இலையாக பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது போல மரத்தின் வேர்களும் உடலில் தோன்றும் நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகின்றன. சில வேர்களின் மருத்துவ பலன்களை இந்தப் பதிவில் பார்ப்போம்
நொச்சி வேர்: நொச்சி வேர் ஒரு பிடி, வேப்ப எண்ணெய் சேர்த்து மண் சட்டியில் விறகு அடுப்பில் காய்ச்சி மார்பு, விலா, முதுகு ஆகிய இடங்களில் தடவி வர ஆஸ்துமா குணமாகும்.
தூதுவளை வேர்: தூதுவளை வேரையும், தூதுவளை கீரையுடன் ஓமம், பூண்டு சேர்த்து அரைத்து சாப்பிட சூதகவாயு சம்பந்தமான வியாதிகள் குணமாகி, மலத்தை இளக்கும்.
ஆவாரை வேர்: முகத்தில் வெண்மையான தேமல் இருந்தால் ஆவாரை வேரை எலுமிச்சை சாறு கலந்து அரைத்து பூசிட வெண்மை தேமல் மறையும். வேரை சுத்தம் செய்து காய்ச்சி, ஆறியதும் பருக, நீரிழிவு கட்டுப்படுவ தோடு, மேனிக்கு பளபளப்பைத் தரும்.
கீழாநெல்லி வேர்: கீழாநெல்லி வேரை சீரகம் சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு உருண்டையாக தினமும் சாப்பிட்டு பசும்பால் குடித்து வந்தால் சிறுநீர் கடுப்பு, எரிச்சல் குணமாகும்.
கொன்றை வேர்: கொன்றை வேர் கொழுந்து , வேப்பங்கொழுந்து இவற்றை ஊறவைத்து அரைத்து துவையலாக சாப்பிட மலக்கட்டு போகும்.
ஆலமரத்தின் வேர்: ஆலமரத்தின் இளம் வேர்களும் செம்பருத்தி பூவையும் காய வைத்து இடித்து, தூள் செய்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாக வளரும்.
ஆடாதொடா வேர்: ஆடாதொடா வேர் 4-5, ஒரு துண்டு வசம்பு சேர்த்து அரைத்து கட்டி மேல் பூச கட்டி பழுத்து உடையும்.
வெள்ளை கற்றாழை வேர்: வெள்ளை கற்றாழை வேரை நிழலில் உலர்த்தி அதை பொடி செய்து, நெய்யில் குழைத்து கண்ணில் ஒற்றி எடுக்க, கண்ணில் உள்ள பூ குணமாகும்.
தென்னை மர வேர்: ஈறுகளும், பற்களும் நன்றாக பலப்பட தென்னை மரத்து வேரை உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொண்டு வெற்றிலையுடன் மென்று தின்றால் பற்கள் பலப்படும்.
நன்னாரி வேர்: நன்னாரி வேரை கற்றாழை சோற்றுடன் கலந்துண்ண விஷக்கடியால் உண்டாகும் பக்க விளைவுகளை குணப்படுத்தும். நன்னாரி வேரையும், ஆலம் பட்டையும், ஆவாரம்பூ வரையும் சேர்த்து கஷாயம் செய்து வாரம் இருமுறை சாப்பிட்டு வர, முகத்தில் படரும் கருமை போகும்.
வெட்டிவேர்: காய்ச்சல், நீர்க்கடுப்பு உடல் சோர்வு மற்றும் சரும நோய்கள் வெட்டி வேர் ஊறிய குடிநீர் அருந்த நல்ல குணம் கிடைக்கும். வெட்டிவேர் எண்ணையை வடுக்கள் மீது தடவ, அவை மறையத் தொடங்கும். அதீத வியர்வை, தாகம், அரிப்பிற்கு வெட்டிவேர் ஊறிய நீரை குளிக்கும் நீரில் கலந்து குளிக்க, நல்ல நிவாரணம் வழங்கும்.
இவ்வாறு பல நன்மைகளை தரும் வேரின் மகத்துவம் தெரிந்து உபயோகிக்க நல்ல நிவாரணம் கிடைக்கும்.