கல்கி டெஸ்க்
இன்றுள்ள நவீன வாழ்க்கை முறையில் உடல் பருமன் பலருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்னையாக உள்ளது. உடல் எடையைக் குறைப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.
இதற்குக் கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் தேவைப்படுகிறது. உடல் பருமனைச் சரியான நேரத்தில் குறைக்கவில்லை என்றால், உடலில் பிரச்னைகள் மேலும் அதிகரிக்கும்.
சிலர் உடல் பருமனைக் குறைப்பதற்கு, உடற்பயிற்சி கூடங்களுக்குச் செல்கின்றனர். ஆனால், பலர் அதைத் தொடர்வதில்லை என்பதுதான் உண்மை.
உடல் பருமன் இதயநோய், உயர்ரத்த அழுத்தம், அதிகரித்த யூரிக் அமிலம், நீரிழிவு போன்ற ஆபத்தான நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது.
நாம் மதிய உணவு உண்ணும்போது, அன்றைய கலோரிகளில் அரை சதவீதத்தை உட்கொள்ளலாம். அப்போது நமது உடலில் செரிமான சக்தி அதிகமாக இருக்கும்.
இரவு உணவின்போது நாம் குறைந்தபட்ச கலோரிகளையே உட்கொள்ள வேண்டும்.
நாம் சர்க்கரை பானங்கள், இனிப்புகள், பாஸ்தா, மைதா, பிஸ்கட், எண்ணெய் நிறைந்த உணவுகளில் இருந்து விலகி இருக்க வேண்டும்.
உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்யும்பொழுது தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது மிகவும் அவசியம். தண்ணீர் குடிப்பது உடலில் உள்ள நீர்ச்சத்தை தக்க வைத்துக்கொள்வதுடன், தேவையற்ற பசி உணர்வையும் குறைக்கிறது.
உடல் எடையைக் குறைக்க மாவுச்சத்து நிறைந்த உணவுகளை அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும்.
புரதமும், ஆரோக்யமான கொழுப்புகளும் நிறைந்த உணவுகளைச் சாப்பிடலாம். இது நீண்ட நேரத்திற்கு பசி உணர்வைக் கட்டுப்படுத்த உதவும்.
பழங்கள், உலர் பழங்கள், வேக வைத்த காய்கறிகள், சூப், மோர் போன்றவற்றை உட்கொள்ளலாம். பழங்கள் உடலில் நீர்ச்சத்தை தக்க வைத்துக்கொள்ள உதவுவதுடன் உடலுக்குத் தேவையான ஆற்றலையும் வழங்குகிறது.
பன்னீர், பால், சூப், வேகவைத்தக் காய்கறிகள் போன்ற உணவுகள் நம்மை முழு ஆற்றலுடன் செயல்பட உதவும்.
நடைப்பயிற்சி, மிதிவண்டி ஓட்டுதல், ஓடுதல், நீச்சல் போன்றவை நம் முழு உடலையும் செயலில் ஈடுபடுத்துகின்றன. இவற்றை 30 நிமிடங்களுக்குச் செய்யும்பொழுது 500 கலோரிகள் வரை நாம் எரிக்க முடியும்.
இவற்றுடன் தினமும் குறைந்தது ஒரு மணி நேரமாவது சூரிய நமஸ்காரம், தனுராசனம் போன்ற சில எளிய யோகாசனங்களையும் பயிற்சி செய்யலாம்.
இந்தப்பயிற்சிகளை ஒரு வாரத்திற்குத் தொடர்ந்து பின்பற்றி வந்தால் ஒரு வாரத்தில் சிறந்த பலன்களைக் காணமுடியும்.