சி.ஆர்.ஹரிஹரன்
தண்ணீரில் புதினா, இஞ்சி, எலுமிச்சைப் பழத்துண்டுகளை சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி பருகிவந்தால் உடல் பருமன் குறையும்.
தினமும் உணவுடன் எந்த விதத்திலாவது கறிவேப்பிலையை சேர்த்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவடையும்.
கேரட் சாறுடன் தேன் கலந்து குடித்து வர ரத்தசோகை நோய் நீங்கும். ரத்தம் விருத்தியடையும்.
அடிக்கடி இருமல், தும்மல் ஏற்படுகிறதா? அகத்திக்கீரை, அகத்திப்பூ சாறுகளுடன், சிறிதளவு தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நிவாரணம் கிடைக்கும்.
புதினா இலைகளை காய வைத்து, உப்பு சேர்த்து பவுடராக்கி, அதைக்கொண்டு பல் துலக்கி வந்தால், பெரும்பாலான பல் உபாதைகள் விலகி விடும்.
இரவு சாப்பாட்டுக்குப் பிறகு, ஒரு ஆரஞ்சுப் பழத்தின் சாற்றுடன், ஒரு ஸ்பூன் தேன் கலந்து பருகினால் நன்றாக தூக்கம் வரும்.
இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு வாரம் தேனில் ஊற வைக்கவும். தினமும் காலையில் இதிலிருந்து ஒரு துண்டு சாப்பிட்டு வந்தால் வாதம், பித்தம், சோர்வு, செரிமானக் கோளாறு ஆகியவற்றில் இருந்து நிவாரணம் நிச்சயம் என்று மட்டுமல்லாமல் ரத்த ஓட்டமும் அதிகரிக்கும்.
உணவில் அதிகமான அளவில் கறிவேப்பிலையைச் சேர்த்துக்கொண்டால் வேகமாக முடி நரைப்பது கட்டுப்படும்.
வெந்தயக்கீரையை விழுதாக அரைத்து, முகப்பருவின் மீது தடவி வந்தால், பருவினால் ஏற்படும் வலி நீங்குவதோடு பருவும் மறையும்.
அரைக்கீரை நரம்பு சம்பந்தமான அனைத்து வியாதிகளுக்கும் ஏற்றது. நரம்புத் தளர்ச்சிக்கு இலக்கானவர்கள் அரைக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.
புதினாவை நிழலில் காயவைத்து பொடி செய்து பனங்கல்கண்டு சேர்த்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
ஜவ்வரிசியை சாதம் போல் வேக வைத்து, மோரில் கரைத்து உப்பு சேர்த்துச் சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு, வயிற்றுவலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.