ஆர்.ஜெயலட்சுமி
வாழைப்பழம் பாதி எடுத்துக் கொண்டு அத்துடன் ஒரு டீஸ்பூன் பால், அரை டீஸ்பூன் தேன் கலந்து ஃபேஸ் பேக் தயாரித்து முகத்தில் தடவி முப்பது நிமிடங்கள் உலர விட்டு கழுவினால் முகம் பளிச்சென்று பிரகாசிக்கும். கோடை காலத்திற்கு ஏற்ற ஃபேஸ் பேக் இது.
கோடையின் வெப்பத்தால் முகச்சருமம் பாதிக்காமல் இருக்க இளநீரை முகத்தின் மீது ஸ்ப்ரே பாட்டில் உதவியால் ஸ்பேரே செய்து கொள்ள நல்ல பலன் கிடைக்கும்.
வெயிலில் அலைந்து விட்டு வீடு திரும்பியதும் களைப்பாக உணர்கிறீர்களா? ஒரு துண்டு வெல்லம் சாப்பிட்டு ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகுங்கள். வெயிலில் வந்ததால் இழந்த எனர்ஜியை மீண்டும் பெறுவீர்கள்.
சிலருக்கு பானை தண்ணீரை பருகினால் சளி பிடித்துக் கொள்ளும். இவர்கள் அந்தத் தண்ணீரில் சிறிதளவு துளசி இலைகளை போட்டு அருந்தினால் ஜலதோஷம் பிடிக்காது.
கோடையில் வேர்வை நாற்றம் வராமல் தடுக்க, குளிக்கும் நீரில் சிறிது யூடி கோலன் அல்லது பன்னீர் கலந்து கொள்ளலாம்.
வெயிலில் போய் வர மிகுதியாக தண்ணீர் தாகம் எடுத்தால், குளிர்ந்த நீரில் சில துளிகள் தேனை கலந்து அருந்தினால் தாகம் தணிந்து விடும்.
மருதாணி இலையையும் கஸ்தூரி மஞ்சளையும் தனித்தனியாக இடித்து ஒன்றாக கலந்து, வெந்நீரில் குழம்பு போல கரைத்து குளிப்பதற்கு முன் மார்பு, கை இடுக்கு, கழுத்து, வயிறு போன்ற பகுதிகளில் தடவி பத்து நிமிடம் கழித்து குளித்து வந்தால் உடல் வேர்வை அகலும்.
பெண்கள் நாவல் பழ மர இலையை நன்கு மைய அரைத்து உடலில் பூசி குளிக்க கோடையில் ஏற்படும் வேர்வை நாற்றமும் கோடை கட்டிகளும் மறையும்.
சந்தனம், விளாமிச்சை வேர், வெட்டிவேர், இலந்தை விதை, தாளிக்காய் தோல் இவற்றின் தூளை பூசி குளிக்க உடலில் துர்நாற்றம் அகலும்.
வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி, குப்பைமேனி இலைகளை வெயிலில் நன்றாக காய வைத்து தூளாக்கி வைத்துக் கொண்டு இதன் பொடியில் சிறிது எடுத்து பாலில் குழைத்து தேய்த்து இருபது நிமிடம் ஊற வைத்து குளித்தால் முகம் வேர்க்குரு வராமல். வெயிலால் கருத்துப் போகாமல் இருக்கும்.
கோடைகாலத்தில் வேனல் கட்டிகள் வந்தால், வேனல் கட்டிகள் மீது குளுமையான நுங்கை மசித்து தடவ வேண்டும். சீக்கிரமே நீங்கிவிடும்.
செம்பருத்தி இலை, துளசி, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து முதல் நாளே ஊறவைத்து மறுநாள் அரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். வடிகட்டிய சாற்றை ஷாம்பாக தலையில் தேய்த்து குளித்தால் உடல் குளிர்ச்சி அடையும். கோடையினால் ஏற்படும் கூந்தல் உதர்வதையும் தடுக்கும்.
வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளை உண்பது நல்லது. அவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும். தினமும் தேன் சாப்பிடலாம்.
குளித்ததும் நன்கு துடைத்துக்கொண்டு மருதாணி எண்ணெய் தடவி வந்தால், வேர்க்குரு, புண் ஆகியவற்றால் ஏற்படும் அரிப்பு நின்றுவிடும்.
வெயில் சூட்டினால் வரும் வயிற்று வலிக்கு கசகசாவை மிக்ஸியில் அரைத்து கொதிக்க வைத்த பாலுடன் கலந்து சர்க்கரை கலந்து பருக வேண்டும்.