ஆர்.ஜெயலட்சுமி
நுங்குகளை சின்னத் துண்டுகளாக வெட்டி நன்கு காய்ச்சி ஆற வைத்த பாலில் போட்டு சர்க்கரை ஏலக்கா பொடி சேர்த்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.
இரண்டு வெள்ளரிப்பிஞ்சுகளை நறுக்கி நான்கு கப் மோர், தேவையான அளவு உப்பு, கொத்தமல்லி இலையை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு ஸ்பூன் ஓமத்தை தாளித்து டம்ளரில் விட்டு வெள்ளரிக்காய் ஸ்லைசை மேலே வைத்து பரிமாறினால் வெயில் காலத்திற்கு சூப்பாக இருக்கும்.
தர்பூசணி பழ துண்டுகளை பதநீரில் போட்டு ஒரு துண்டு ஐஸ்கட்டி சேர்த்து சாப்பிட உடல் சூடு தணியும்.
இரண்டு மூன்று வகை பழங்கள் இருந்தால் எல்லாவற்றையும் துண்டுகளாக்கி சர்க்கரை, சிறிது மில்க்மெய்டு போட்டு கலக்கி ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
நாக்கு வறட்சியாக இருந்தால் பார்லி கஞ்சியை வைத்து அந்த கஞ்சியுடன் சிறிது தேன் கலந்து சாப்பிட்டு வர நாக்கின் வறட்சி நீங்கும்.
கோடைகாலத்தில் வீட்டின் உள்ள அழகுக்காக வைக்கப்படும் பிளவர் வால்ஸில் வெள்ளை நிற பூக்களும் பச்சை இலைகளும் இருப்பது போல் பார்த்துக் கொள்ளுங்கள், இது கண்ணுக்கு குளிர்ச்சியாகவும் வெயிலின் கொடுமை தெரியாமல் இருக்க செய்யும்.
வெயில் காலங்களில் உணவில் நிறைய மோர் மற்றும் தயிர் சேர்த்துக்கொண்டால் குளிர்ச்சியும் ஜீரணமும் எளிதில் ஆகும்.
உஷ்ணத்தால் ஏற்படும் வயிற்று வலிக்கு, ஒரு எலுமிச்சை பழத்தின் சாறை இளநீரில் கலந்து கொடுத்தால் வயிற்று வலி கப் என்று நின்று விடும்.
கோடைகாலத்தில் சூட்டை தணிப்பதற்கு அடிக்கடி அல்லது தினசரி சாலட் வகைகளை சாப்பிடுங்கள், கேரட், வெள்ளரி, வெண்டை, தக்காளி, பெரிய வெங்காயம், கருவேப்பிலை, கொத்தமல்லியுடன் மிளகு, உப்பு சேர்த்து சாலட் சாப்பிடுவது ஆரோக்கியமானது.
நான்கு பெரிய நெல்லிக்காயை குக்கரில் வேகவைத்து கொட்டை நீக்கி மசித்து கெட்டி தயிரில் கலந்து பெருங்காயம், கடுகு, பச்சை மிளகாய் போட்டு தாளித்து சாப்பிட்டால் உடலுக்கு குளிர்ச்சி ஏற்படும்.
குளிக்கும் நீரில் ஓர் எலுமிச்சம் பழத்தை பிழிந்து சிறிது உப்பையும் கலந்து குளித்து வந்தால் வியர்வை நாற்றம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் தூதுவளை பழங்களை வாங்கி அதில் குண்டு ஊசியால் துளைகள் போட்டு தேனில் ஊற விட வேண்டும். தினம் இரண்டு பழங்களை அதிலிருந்து சாப்பிட்டால் கோடையில் ஜில்லென்று எது குடித்தாலும் ஜலதோஷம் வராது.