அனிஷா வி. எஸ்
பருவநிலை மாற்றம், உணவுப் பழக்கங்கள் மற்றும் வேகமான வாழ்க்கைமுறை ஆகியவை நம் உடலின் வெப்பநிலையை பாதிக்கின்றன. அதேபோல், அதிக உடல் சூடு ஆரோக்கியத்தில் பல சிக்கல்களை உருவாக்கும் என்பதையும் நாம் அறிவோம்.
இந்நிலையில், உடல் வெப்பத்தை சமநிலையில் வைக்கும் எளிய வழிமுறைகள் மற்றும் உணவுப் பழக்கங்களைப் பற்றி தெரிந்துக்கொள்ளலாம்.
உடல் வெப்பம் அதிகரிக்க பல காரணங்கள் உள்ளன. திடீர் பருவநிலை மாற்றம், அதிக நேரம் ஒரே இடத்தில் உட்காருவது, நீண்ட நேரம் வாகனங்களில் பயணம், உணவு பழக்கங்கள், மன அழுத்தம் மற்றும் நீர்சத்து குறைபாடு போன்றவைகளும் உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும்.
ஏற்படும் பிரச்னைகள் என்ன?
உடல் சூடு அதிகரிக்கும் போது தூக்கமின்மை, கண்களில் எரிச்சல், அடிக்கடி வயிற்று வலி, ஒற்றைத் தலைவலி, முகப்பருக்கள், தலை பாரமாக இருப்பது, கோபம் அதிகரித்தல், மலச்சிக்கல், சிறுநீர் பாதையில் தொற்று போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன.
உடல் சூட்டை குறைக்கும் வழிகள்:
தினமும் தலையில் குளிர்ந்த தண்ணீர் ஊற்றுவது உடல் வெப்பத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.
தலைக்கு தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது உடல் சூட்டை குறைக்கும்.
சீரகத்தில் உள்ள இயற்கையான குளிர்ச்சி தன்மைகள் உடல் வெப்பத்தை கட்டுப்படுத்த உதவுகின்றன.
தினமும் குறைந்தது 2–3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
குடல் புண்களை தீர்க்கும் திறன் கொண்ட மாதுளை பழம், உடல் சூட்டை குறைக்க ஒரு சிறந்த தீர்வாகும்.
ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை போன்ற வைட்டமின் சி நிறைந்த பழங்களை உணவில் சேர்த்தால், உடலில் குளிர்ச்சி ஏற்படும்.
தர்பூசணி, முலாம் பழம், புதினா டீ, வெள்ளரிக்காய், பூசணி, முள்ளங்கி, சுரைக்காய் போன்றவை நீர் சத்துகளால் நிரம்பியவை. இவை உடல் சூட்டை இயற்கையாகக் குறைக்கும்.
இறுதியாக, இளநீர் போல சூட்டை குடிக்கும் ஒன்று எதுவுமே கிடையாது. முடிந்த வரையில் ஒரு வாரம் தொடர்ந்து குடித்து வந்தால் உடல் சூட்டை நன்றாக குறைத்துவிடலாம்.
இது போன்று அந்தந்த பருவநிலைக்கேற்ப இயற்கையான பழங்கள், காய்கறிகள், பானங்களை உணவில் சேர்த்து, எளிய முறையில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வோம், ஆரோக்கியமாக வாழ்வோம்.