ஆர்.ஜெயலட்சுமி
உடலை நடுங்க வைக்கும் இந்த குளிர் பனிக்காலத்தில் உங்கள் உடலில் பல கோளாறுகள் ஏற்படலாம். அதிலிருந்து தப்ப இதோ சில எளிமையான வழிகள்.
பனி, குளிரிலிருந்து தப்ப கெட்டியான ஒரு ஆடை அணிவதற்கு பதில் மெல்லிய இரண்டு மேல் ஆடைகளை அணிவது நல்லது.
குளிரை கண்டு பயப்படாமல் சிறிது நேரம் உடற்பயிற்சி செய்யுங்கள் உடல் சூடாகும்.
சளி தொல்லை இல்லாத சிலருக்கு கூட மூக்கில் நீர் வழிதல் ஏற்படும் அதை தடுக்க காலையில் சாப்பிடும் டீயில் சுத்தப்படுத்தப்பட்ட ஓமம் சிறிதளவு போட்டு குடியுங்கள்.
சிறிய வெங்காயம், பூண்டு, வெந்தயம், வெல்லம், பாதாம் பருப்பு, கிஸ்மிஸ் பழம் ஆகியவைகளை உணவில் அதிகம் சேருங்கள். அதனால் குளிர்கால நோய்களை தடுக்கலாம்.
கைகள் குளிரில் நடுங்கினால் ஆலிவ் எண்ணெய் தேய்த்து விரல்களை சிறிது நேரம் மடக்கி வைத்திருந்தால் அது சரியாகிவிடும்.
குளிருக்கு பயந்து குளிக்காமல் இருக்காதீர்கள். குளிப்பதே நல்லது குளிக்காவிட்டால், பனிக்கால அழுக்கு உடலில் சேர்ந்து விடும்.
குளிர்காலத்தில் வயிற்றை காலியாக வைத்திருக்காதீர்கள். வயிற்றுக்கு சாப்பிடுவதே பனிக்காலத்தில் உடலுக்கு நல்ல சக்தியை தரும். சாப்பாட்டில் கண்டிப்பாக காரத்தை குறையுங்கள்.
எல்லோருமே தினமும் ஒரு ஐந்து நிமிடம் வேப்பிலை, மஞ்சள், உப்பு சேர்த்து கொதிக்க வைத்து ஆவி பிடித்தால், மூக்கு தொண்டையில் உள்ள வைரஸ் கிருமி அழிந்து விடும்.
சுடுதண்ணீரில் உப்பு போட்டு வாய் கொப்பளிக்க வேண்டும். தினமும் இரு முறை இவ்வாறு செய்தால், தொண்டையின் எந்த கிருமிகளும் தாக்காது.
பனிக்காலத்தில் இனிப்பு நிறைய சாப்பிடக்கூடாது. வெதுவெதுப்பான தண்ணீரையே குடிக்க வேண்டும். குளிர்பானங்களை கட்டாயம் தொடவே கூடாது.
குளிர்காலத்தில் தலையில் பேன் தொல்லை அதிகரிக்கும். வசம்பு பவுடருடன், தேங்காய் எண்ணெயும், தயிரும் கலந்து பத்து நிமிடம் ஊற வைத்து குளித்தால் பேன் தொல்லை குறைந்து விடும்.