
இந்தியாவின் முக்கிய 50 நகரங்களில் வீடுகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக ஆய்வு அறிக்கை மூலம் தெரிய வந்திருக்கிறது.
சொந்த வீடு என்பது ஒவ்வொரு மனிதருக்குமே இருக்கக்கூடிய கனவு என்றே சொல்லலாம். அடிப்படை தேவைகளான உணவு,உடைக்கு அடுத்து இருப்பிடமே இருக்கிறது. அதனால் இருப்பிடத்திற்கு அதிக முக்கியத்துவம் அனைவரும் தருவார். அதிலும் சொந்த இருப்பிடத்தை வாங்க வாழ்கையில் பெரும்பகுதியை செலவிடும் குடும்பங்களும் இருக்கின்றன. இப்படி எத்தனை சிரமங்கள் ஏற்பட்டாலும் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற பாதையில் பயணிக்கும் மக்களினுடைய எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்த நிலையில் வீட்டு வசதிகள் மற்றும் அதற்கான சேவை நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் தேசிய வீட்டு வசதி வங்கி, பல்வேறு வகையான வங்கிகள் மற்றும் வீட்டுக்கடன் சேவை நிறுவனங்களை ஆய்வு செய்து ஆய்வு அறிக்கையை ஒன்று வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் இந்தியாவின் 50 நகரங்களில் வீடுகளின் விலை உயர்ந்திருக்கிறது. அந்த நகரங்களில் வீடுகளை வாங்க பல்வேறு கிராமங்கள், வேறு நகர பகுதிகளை சேர்ந்த மக்கள் தீவிரம் ஆர்வம் காட்டுவதால் இந்த விலையேற்றம் ஏற்பட்டு இருக்கிறது என்று கூறப்பட்டு இருக்கிறது.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் உள்ள 50 நகரங்களில் வீடு மற்றும் வீட்டுமனைகளின் விற்பனை விலை 4 சதவீதம் உயர்ந்து இருக்கிறது. கடந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் 1.3 சதவீதம் விற்பனை உயர்வை கண்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் அகமதாபாத்தில் வீடுகளினுடைய விற்பனை விலை 9.1 சதவீதமும், பெங்களூருவில் வீடுகளின் விலை 8.9 சதவீதமும், கொல்கத்தாவில் 7.8 சதவீதமும், சென்னையில் 1.1 சதவீதமும், டெல்லியில் 0.8 சதவீதமும், ஹைதராபாத்தில் 6.9 சதவீதமும், மும்பையில் 2.9 சதவீதமும், புனேவில் 6.1 சதவீதமும் வரை விலை உயர்வு ஏற்பட்டு இருக்கிறது என்று அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.