
சீனாவில் இருந்து இறக்குமதியாகும் நிட்டிங் துணி ரகங்களால் உள்நாட்டு வியாபாரிகளின் விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் திருப்பூர், ஈரோடு, கோவை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜவுளி உற்பத்தி மற்றும் அது சார்ந்த சாயப்பட்டறைகள், நூற்பாலைகள், நிட்டிங் ஆலைகள் பிரதான தொழிலாக இருக்கின்றன. இவற்றை வாழ்வாதாரமாகக் கொண்டு குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டும் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் உள்நாட்டு நிறுவனங்கள் குறைவு, நூல் விலை உயர்வு, வரி உயர்வு, போக்குவரத்திற்கு கூடுதல் செலவு போன்ற பல்வேறு காரணங்களால் தமிழ்நாட்டில் இயங்கி வரும் ஜவுளி தொழில்கள் பாதிப்பை சந்தித்து இருக்கின்றன. இந்த நிலையில் தற்போது சீனாவில் இருந்து நிட்டிங் துணிகள் அதிக அளவில் இறக்குமதியாவதால் உள்நாட்டு வியாபாரிகள் மிகப் பெரும் அளவில் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஜவுளி உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து கோவை ஜவுளி உற்பத்தி ஆலை உரிமையாளர் சங்க நிர்வாகிகள் தெரிவிப்பது, தற்போது உலக அரங்கில் மிகப்பெரிய வர்த்தக போட்டி நிலவுகிறது. அதனால் சர்வதேச சந்தையில் போட்டி போட்டுக்கொண்டு பல்வேறு நாடுகளும் ஜவுளி உற்பத்தியில் கூடுதல் கவனம் செலுத்துகின்றன. இதனால் வளர்ந்து வரும் நாடுகளைச் சேர்ந்த வியாபாரிகள் நசுக்கப்படுகின்றனர்.
மேலும் உள்நாட்டில் இருக்கக்கூடிய பல்வேறு பிரச்சனைகளும் உள்நாட்டு வியாபாரிகளுடைய வளர்ச்சியை தடுக்கிறது. உலக ஜவுளி சந்தையில் சீனா 35 சதவீதம் பங்குகளுடன் ஆதிக்கம் செலுத்துகிறது. ஆனால் இந்தியா 5 சதவீதம் மட்டுமே ஏற்றுமதி செய்து சர்வதேச சந்தையில் தன்னுடைய பங்களிப்பை செலுத்துகிறது.
தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் குறிப்பாக சீனாவில் இருந்து நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலகட்டத்தில் 2, 270 கோடி ரூபாய் அளவிலான நிட்டிங் துணி இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. அதில் 30 சதவீதம் சாயம் இடப்பட்ட நிட்டிங் வகை துணிகள் ஆகும். இதனால் உள்நாட்டில் இயங்கி வரும் நூற்பாலைகள், சாயப்பட்டறைகள், நிட்டிங் ஆலைகள் மிகப்பெரும் பாதிப்பை சந்தித்து இருக்கின்றன. இவற்றை கட்டுப்படுத்த இந்திய அரசு 20% வரி உயர்வை விதித்தும் கூட அவை முறையாக பின்பற்றப்படுவதில்லை என்று தெரிவித்தனர்.