வாழ்க்கைச் சான்றிதழ் என்பது ஓய்வூதியம் பெறுபவர் உயிருடன் தான் இருக்கிறார் என்றும், அவருக்குத் தான் இந்தப் பணம் சென்று சேருகிறது என்பதற்கான உரிய சான்றாக செயல்படுகிறது.
ஓய்வூதியம் பெறுபவர்கள் இந்த வெரிஃபிகேஷன் நிறைவு செய்தால் மட்டுமே மோசடிகளை தடுக்க முடியும். அத்துடன் தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த சலுகைகள் சென்று சேர்வதை உறுதி செய்ய முடியும் என்பதால் இது மிகவும் அவசியமாகிறது.
ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் ஓய்வூதியத்தைத் தொடர்ந்து பெறுவதற்கு, ஒவ்வொரு ஆண்டும் வாழ்க்கைச் சான்றிதழ் (Life certificate) சமர்ப்பிக்க வேண்டும். இது ஓய்வூதியம் பெறுபவர் உயிருடன் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்துகிறது. இதை டிஜிட்டல் முறையில் ஜீவன் பிரமான் (Jeevan Pramaan) சேவையின் மூலம் ஆன்லைனிலும், அல்லது நேரிலோ, அல்லது தபால் அலுவலகத்தின் வீடு தேடி வரும் சேவை மூலமாகவும் சமர்ப்பிக்கலாம்.
முன்பு ஓய்வூதியம் பெறுபவர்கள் இந்த சான்றிதழை நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால் இப்பொழுது ஜீவன் பிரமான் போன்ற டிஜிட்டல் முறையின் மூலம் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.
டிஜிட்டல் வாழ்க்கை சான்றிதழ் (Jeevan Pramaan):
இது பயோமெட்ரிக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஓய்வூதியதாரர்களுக்கான டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழ் வழங்கும் சேவையாகும். மத்திய, மாநில அரசுகள் அல்லது வேறு எந்த அரசு நிறுவனங்கள் ஓய்வூதியம் வழங்கும் ஏஜென்சிகள் வழியாக இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஓய்வூதியதாரர் ஆன்லைனில் பதிவு செய்து, தங்களுக்கான டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழைப் பெற முடியும். இந்த சேவையைப் பற்றிய விரிவான தகவல்களைப் பெறுவதற்கு அருகில் உள்ள ஜீவன் பிரமான் மையத்தைத் தொடர்பு கொள்ளலாம்.
இந்த டிஜிட்டல் சர்வீஸ் மூலம் எந்த நேரத்திலும், எந்த இடத்திலிருந்தும் சமர்ப்பிக்க முடியும். இதன் மூலம் வங்கிகள் அல்லது சர்வீஸ் சென்டர்களுக்கு நேரடியாகச் சென்று சமர்ப்பிக்க வேண்டிய தேவையில்லை.
தபால் அலுவலக சேவை:
ஓய்வூதியம் பெறுவோர் தபால் அலுவலகத்தின் வீடு தேடி வரும் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே வாழ்க்கைச் சான்றிதழை சமர்ப்பிக்கலாம். அல்லது ஆன்லைன் போர்டல் வசதி மூலம் ஜீவன் பிரமான் போர்ட்டலில் உள்நுழைந்து டிஜிட்டல் முறையில் தங்கள் வாழ்க்கைச் சான்றிதழை வழங்கலாம்.
டோர் ஸ்டெப் பேங்கிங் சர்வீஸ்:
உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக நடமாட முடியாத ஓய்வூதியதாரர்களுக்கு பல பொதுத்துறை வங்கிகள் வீட்டுக்கே வந்து வங்கி சேவைகளை வழங்குகின்றன. அதற்கு பேங்க் பிரதிநிதியின் வருகைக்கு ரெக்வஸ்ட் கொடுக்க வேண்டும்.
பிரதிநிதி நேரில் வந்து ஓய்வூதியதாரரின் பயோமெட்ரிக் தரவை சேகரித்து பென்ஷனர் சார்பாக வாழ்க்கை சான்றிதழை சமர்ப்பிப்பார். இந்த வசதி உடல்நலம் சரியில்லாதவர்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் வாழ்க்கைச் சான்றிதழைப் பெற உதவுகிறது.
தடையற்ற ஓய்வூதியம் பெற:
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 30ஆம் தேதிக்குள் இந்த வாழ்க்கைச் சான்றிதழை சமர்ப்பிப்பதன் மூலம் ஓய்வூதியத்தை பெறுவது தொடரும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.