பாரதியின் குவளை கண்ணன்! டி பி கஜேந்திரன் நினைவலைகள்…

பாரதியின் குவளை கண்ணன்! டி பி கஜேந்திரன் நினைவலைகள்…

திரைப்பட இயக்குனரும் ஓய்வு பெற்ற ஐ ஏ எஸ் அதிகாரியுமான ஞான ராஜசேகரன் இயக்கிய வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படங்களில் ஒன்று ‘பாரதி’. இத்திரைப்படத்தில் மகாகவி பாரதியின் நண்பரான குவளை கண்ணன் வேடத்தில் நடித்திருந்தவர் இயக்குனரும், நடிகருமான டி.பி கஜேந்திரன். அவர் தனது 68 வயதில் பிப்ரவரி 5 அன்று உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.

இயக்குனர் பாலசந்தர் மற்றும் மறைந்த நடிகரும், இயக்குனருமான விசு இருவரிடமும் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர் டி. பி கஜேந்திரன். இதுவரை 15 திரைப்படங்களை இயக்கியுள்ளார். 100 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் துணைக்கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர், தாம் ஏற்று நடித்த கதாபாத்திரங்களிலே தமக்கு மனநிறைவையும், விருது பெற்ற அளவுக்கான சந்தோசத்தையும், திருப்தியையும் அளித்தது ‘ பாரதி’ திரைப்படத்தின் குவளை கண்ணன் வேடம் தான் எனத் தனது நேர்காணலொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

‘பாரதி’ படத்தைப் பார்த்து விட்டு மறைந்த குவளை கண்ணன் குடும்பத்தினர் தன்னை நேரில் சந்தித்து, நிஜ குவளை கண்ணனையே நேரில் பார்த்தார் போல் இருக்கிறது உங்களது நடிப்பு என மனம் நெகிழ்ந்து கண்ணீருடன் பாராட்டியதை தமக்கான விருதாகக் கருதுவதாகக் கூறும் கஜேந்திரன் பாலசந்தரின் மோதிரக் கையால் குட்டுப்பட்டவர்.

பாலசந்தரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிக் கொண்டிருந்த போது தமது உருவத்தைக் கண்டு கேலி செய்த பல நடிகர், நடிகைகள் பின்நாட்களில் தான் வெற்றிகரமான இயக்குனரானதும் தன்னிடமே வாய்ப்புக்காக வந்து நின்ற கதையை தமக்கான வெற்றியாகக் கருதுவதாக கஜேந்திரன் பெருமிதத்துடன் குறிப்பிடுவதுண்டு.

நடிகர் பிரபுவை நாயகனாக்கி இவர் இயக்கிய பந்தா பரமசிவம், மிடில் கிளாஸ் மாதவன், பட்ஜெட் பத்மநாபன் உள்ளிட்ட மீடியம் பட்ஜெட் திரைப்படங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வசூலில் சாதித்தன.

நடிகர் கார்த்திக்கை வைத்து ‘பாண்டி நாட்டுத் தங்கம்’ என்றொரு திரைப்படத்தை இயக்கி வெளியிட்டார். அந்தப் படத்தின் பாடல்கள் இன்றளவும் மக்கள் மனதில் நிற்பவை.

இயக்குநராக டி பி கஜேந்திரனின் அறிமுகத் திரைப்படம், வீடு மனைவி மக்கள். விசு, கே.ஆர் விஜயா, பாண்டியன், சீதா நடிப்பில் 1988 ஆம் ஆண்டில் வெளியானது இத்திரைப்படம். ஆனால், ஒரு நடிகராக 1985 ஆம் ஆண்டில் ‘சிதம்பர ரகசியம்’ திரைப்படம் வாயிலாக முன்னதாகவே மக்களிடையே அறிமுகமாகி விட்டார் கஜேந்திரன்.

தூத்துக்குடியில் பிறந்த கஜேந்திரனின் தகப்பனார் பெயர் பெருமாள். இவரது உறவினர்களில் குறிப்பிடத் தகுந்த பிரபலம் என நடிகை டி.பி முத்துலட்சுமியைச் சொல்லலாம். கஜேந்திரனின் அண்ணியான முத்துலட்சுமி சிறுவயதில் தன்னுடைய வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தார் என்று நன்றி மறவாமல் கஜேந்திரன் நினைவு கூர்வதுண்டு.

இதுவரை சுமார் 15 திரைப்படங்களை இயக்கியுள்ள கஜேந்திரன், 100 க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்து ஒரு குணச்சித்திர நடிகராகவும், நகைச்சுவை நடிகராகவும் மக்கள் மனதில் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றும் கூட கஜேந்திரன் என்றதும் உடனே நினைவுக்கு வருவது;

பாரதி திரைப்படத்தின் குவளை கண்ணன் கதாபாத்திரமும், பம்மல் கே சம்பந்தம் திரைப்படத்தில் இடம்பெறும் நகைச்சுவை மிகுந்த இயக்குநர் கதாபாத்திரமும் தான். பேரழகன் திரைப்படத்தில் நடிகர் சூர்யா மற்றும் விவேக்குடன் இணைந்து இவர் நடித்த கமிஷன் மண்டி கஜேந்திரன் கதாபாத்திரமும் தான்.

ஒரு நடிகருக்கு உண்டான தோற்றப் பொலிவோ, வசீகரமோ, உயரமோ இல்லாத போதும் கூட நடிப்பால் தமது இருப்பை உணர வைத்தவர் கஜேந்திரன்.

அவரது தன்னம்பிக்கை பாராட்டுதலுக்குரியது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com