‘ஹேப்பி பர்த்டே விவேக் சார்…’

‘ஹேப்பி பர்த்டே விவேக் சார்…’

மிழ்த் திரையுலகில், ‘சின்னக் கலைவாணர்’ என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டவர் நகைச்சுவை நடிகர் விவேக். மக்களிடையே காணப்படும் மூட நம்பிக்கைகள், அரசியல் பித்தலாட்டங்கள், ஊழல், லஞ்சம் ஆகியவற்றை இடித்துரைத்து, தமது திரைப்படங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். இதனால் இவர், ‘ஜனங்களின் கலைஞர்’ என்றும் மக்களால் அழைக்கப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி இலுப்பை ஊரணி எனும் ஊரில் அங்கய்யா பாண்டியன் – மணியம்மாள் ஆகியோருக்கு மூன்றாவது கடைக்குட்டியாகப் பிறந்த இவர், ஊட்டி கான்வென்ட்டில் பள்ளிப் படிப்பையும், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பி.காம் பட்டமும் பெற்றவர். ஆர்மோனியம், வயலின், தபேலா ஆகியவற்றை வாசிப்பதில் வல்லவர். இவரை அவரது பெற்றோர்கள், ‘ராஜு’ என செல்லமாக அழைத்தனர். சென்னை, தலைமைச் செயலகத்தில் அரசுப் பணியாற்றிய இவரது திறமையைக் கண்டு இயக்குநர் பாலசந்தர் தமது படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். அருட்செல்வி என்பவரைத் திருமணம் செய்த இவருக்கு அமிர்தா நந்தினி, தேஜசுவினி, பிரசன்னா ஆகிய மூன்று குழந்தைகள் உண்டு. இதில், அவரது மகன் சிறு வயதிலேயே எதிர்பாராதவிதமாக இறந்துவிட்டார். அந்தத் துயரத்தில் மிகவும் பாதிக்கப்பட்டார் விவேக்.

இயக்குர் பாலசந்தரின் அறிமுகம், இவரை திரைத் துறையில் உச்சத்துக்குக் கொண்டு சென்றது. 1987ம் ஆண்டு தொடங்கிய இவரது கலைப்பயணம், அவர் மறைந்த 2021ம் ஆண்டு வரையும், அதற்கு மேலும் கூட தொடர்ந்தது. அவர் தமது சினிமா உலகக் கலைப்பயணத்தில் உடன் சேர்ந்து நடிக்காத உச்சபட்ட நடிகர், நடிகைகளே இல்லை எனும் அளவுக்கு அவரது புகழ் ஓங்கி உயர்ந்து இருந்து குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, இவரது நகைச்சுவைக்காக மட்டுமே வெற்றிகரமாக ஓடிய திரைபடங்களும் உண்டு.  நகைக்சுவை என்பது சிரித்துவிட்டு மட்டும் போவது கிடையாது, மக்களை சிந்திக்க வைக்கவும் செய்ய வேண்டும் என்பதைத் தமது கொள்கையாகவே படங்களின் மூலம் காண்பித்தவர் நடிகர் விவேக்.

அர்த்தம் பொதிந்த இவரது நகைச்சுவை நடிப்பாற்றலை மெச்சி, இந்தியாவின் மிகப்பெரிய விருதான, ‘பத்மஸ்ரீ’ முதற்கொண்டு, நாட்டின் பல்வேறு விருதுகள் இவரைத் தேடி வந்தன. உலகமெல்லாம் வாழும் தமிழ் சினிமா ரசிகர்களை தமது நகைச்சுவை நடிப்பின் மூலம் கவலையை மறந்து சிரிக்க வைத்த அந்த மிகப்பெரிய கலைஞன் நடிகர் விவேக் அவர்களின் பிறந்த தினம் (19.11.2022) இன்று. காலங்கள் மாறினாலும், காட்சிகள் மாறினாலும், ஏன் அவரே நம்மிடையில் இல்லையென்றாலும் அவரது நினைவுகள் என்றென்றும் நம்முடன் இருக்கும். ‘ஹேப்பி பர்த்டே விவேக் சார்…’

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com