"150 வயதுவரை வாழ்வேன்" நடிகர் சரத்குமாரின் பிட்நஸ் ரகசியம் இதுதானா?

"150 வயதுவரை வாழ்வேன்"  நடிகர் சரத்குமாரின் பிட்நஸ் ரகசியம் இதுதானா?

சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனரும் நடிகருமான சரத்குமார், தான் 150 வயது வரை உயிருடன் இருப்பேன் எனவும், அவ்வளவு நாட்கள் ஆரோக்கியமாக உயிருடன் இருப்பதற்கான வித்தையை கற்று வைத்துள்ளேன் என கூறி கருத்து தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.

மதுரையில் நேற்றைய தினம் சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் சரத்குமார்“ உங்கள் தலைவர், நாட்டாமை 2026 தேர்தலில் தமிழகத்தில் ஆட்சி அமைக்கவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி உள்ளீர்கள். ஆனால், அது சாத்தியமா என்பது தேர்தலின்போதுதான் தெரியவரும். அதற்கு முயற்சி, நேர்மை, உடல் வலிமை மனவலிமை இருக்கவேண்டும். தற்போது எனக்கு 69 வயதாகிறது இன்னும் சில மாதங்களில் 70 வயதை அடைந்துவிடுவேன். ஆனால் நான் இப்போதும் 25 இளைஞனை போல்தான் இருக்கிறேன். என்னால் இன்னும் 150 வயது வரை உயிருடன் இருக்கமுடியும். அதற்கான வித்தையை நான் கற்று வைத்திருக்கிறேன். அந்த வித்தையை 2026ல் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று அரியணையில் ஏறும்போது சொல்வேன்” என்றார்.

பொதுவாக உலகத்தில் ஒருவருடைய ஜனனமும், மரணமும் எப்போது நிகழும் என யாருக்கும் தெரியாது. அது தெரியாமல் இருப்பதுதான் மனித வாழ்க்கையை அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்த்தி கொண்டுச்செல்கிறது. இந்நிலையில், தான் 150 வயதுடன் உயிருடன் இருப்பேன் என நடிகர் சரத்குமார் உறுதியாக சொல்லியிருப்பது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரம் நடிகர் சரத்குமார் 69 வயதிலும் இவ்வளவு இளமையாகவும் உடல் ஆரோக்கியத்துடனும் இருப்பது குறித்து இணையத்தில் தேடத் தொடங்கியுள்ளனர் நெட்டிசன்கள்.

நடிகர் சரத்குமார் உடல் ஆரோக்கியதற்கு முக்கிய காரணம் அவரின் தந்தைதான். குத்துச்சண்டை வீரரான சரத்குமாரின் தந்தை ராமநாதன் தன் பிள்ளைகள் அனைவரும் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க தினமும் உடற் பயிற்சி செய்ய ஊக்குவித்து வந்துள்ளார்.

உடலை ஏன் ஆரோக்கியமான வைத்துக்கொள்ளவேண்டும் என்பதற்கு ராமநாதன் சொன்ன ஒரே விஷயம். ஒருவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டால் உறவுகள் கூட ஒரு கட்டத்தில் தள்ளி நின்றுவிடுவார்கள். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும், அதுபோல்தான் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது ஒவ்வொருவரின் உடல்நலத்திற்கு நல்லது. இதனால் சிறுவயதிலேயே விளையாட்டின் மீது ஆர்வம் கொண்டவராக வளர்ந்தார் சரத்குமார்.

பின்னர் பள்ளி காலத்திலேயே என்.சி.சி. மாணவராக இருந்து 1970ல் டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் கலந்துக்கொண்டுள்ளார். என்.சி.சி.மாணவராக இருந்த காரணத்தில் தன்னுடைய எல்லா விஷயங்களையும் திட்டமிட்டு செயல்படுத்துவதிலும், அனைத்திலும் ஒரு ஒழுக்கத்தை பின்பற்றுவது சரத்குமாருக்கு இயல்பான விஷயமாக மாறிவிட்டது.

இதனையடுத்து 1974 மிஸ்டர் மெட்ராஸ் டைட்டில் வென்றார். அதன்பிறகு பல தொழில்களை நடத்திவந்தார்.பின்னர், சினிமாவில் நுழைந்தார். இதுவெல்லாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். தற்போது வைரலாகியுள்ள சரத்குமாரின் பிட்நஸ் விஷயத்திற்கு வருவோம்.

150 வயதுவரை உயிருடன் இருப்பேன் என கூறி சரத்குமார் ஆரோக்கியத்தின் பின்னனி என்ன?

சிறுவயது முதல் தற்போதுவரை காலை 4 மணிக்கு எழுந்திருக்கும் பழக்கம்கொண்டவர். அதேபோல், எழுந்தவுடன் காலை கடன்களை எல்லாம் முடித்துவிட்டு 10 பாதாம் அதனுடன் ப்ளாக் காஃபி சாப்பிடும் பழக்கம் கொண்டவர்.

அதன்பிறகு ஒரு மணிநேரத்திற்கு மேல் உடற்பயிற்சி. பயிற்சியை முடித்தவுடன் மீண்டும் 10 பாதாம். பின்னர், காலை உணவுக்காக பாதாம் பாலில் பெர்ரி பழங்களை சேர்க்கப்பட்ட ஸ்மூத்தியுடன் ஒரே ஒரு இட்லி.

பின்னர், 11 மணிக்கு பீனட் பட்டர் சேர்த்து ஒரு சப்பாத்தியை ஸ்நாக்ஸாக எடுத்துக்கொள்வாராம். மதிய உணவுக்கு சிறிதளவு சாதத்துடன் Tofu அல்லது பனீர் கிரேவி. மாலை 4 மணிக்கு மீண்டும் 10 முந்திரியுடன் 3 பாதாம் எடுத்துக்கொள்ளும் சரத்குமார், இரவு உணவாக சியா விதைகளுடன் பாதாம் பால், கூடவே ஒரு அடை சாப்பிடுகிறாராம். இதுதான் சரத்குமாரின் சமீபத்திய டயட்டாக உள்ளது.

சமீபத்தில் சைவ உணவுகளை எடுத்துக்கொள்ளும் சரத்குமார் அதற்கு முன்புவரை அசைவம், சைவம் என அனைத்து விதமான உணவுகளை சரியான விதத்தில் எடுத்துக்கொண்டுள்ளார். கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தினமும் ஒருநாள் தவராது உடற்பயிற்சி செய்துவரும் சரத்குமார், சாக்லேட், இனிப்பு வகைகளை தவிர்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இப்போது புரிகிறது சரத்குமாரின் உடல் ஆராக்கியத்திற்கு பின்னால் உள்ள விஷயம். மாறிய வரும் உணவு மற்றும் வாழ்க்கை கலாச்சாரத்தில் உணவும் உடல் ஆரோக்கியமும் ஒரு மனிதனின் உடல் ஆரோக்கியதற்கு எவ்வளவு முக்கிய என்பது. தன்னுடைய உடல் ஆரோக்கியத்தில் இவ்வளவு கட்டுப்பாடுடன் இருப்பதால்தான் சரத்குமார் 150 வயது வரை வாழ்வேன் என தைரியமாக சொல்லமுடிகிறது. நீங்கள் இன்றுபோல் பல ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழவேண்டும் சரத்.. உங்களின் உடல் ஆரோக்கியம் இன்றைய இளைஞர்கள் ஒவ்வொருவருக்கும் உத்வேகம் அளிக்கும் உற்சாக டானிக்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com