வரிசை கட்டி நிற்கும் 'Part-2' திரைப்படங்கள்! அந்த வரிசையில் 'வட சென்னை 2' எப்போ? வெற்றிமாறன் கொடுத்த மாஸ் அப்டேட்!
சமீபகாலமாகவே கோலிவுட்டில் தயாராகி மாபெரும் வெற்றியடைந்து வரும் பெரும்பாலான திரைப்படங்கள் இரண்டாம் பாகத்தை நோக்கி அடியெடுத்து வைத்து வருகின்றன.
அந்த வகையில், சில வருடங்களுக்குமுன் வெளியான 'சாமி', 'சிங்கம்', 'காஞ்சனா', 'எந்திரன்', 'பீட்சா' என ரசிகர்களிடையே மாபெரும் வெற்றிபெற்ற படங்களின் 'பாகம்-2' திரைப்படங்களும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன.
அதே வரிசையில், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற 'ஜிகர்தண்டா', 'சார்பட்டா பரம்பரை', 'பொன்னியின் செல்வன்', 'வெந்து தணிந்தது காடு', 'காந்தாரா', 'விடுதலை' என பல படங்களின் 2ம் பாகங்கள் உருவாகி வருகிறது.
அந்த வரிசையில் செல்வராகவனின் இயக்கத்தில், 'ஆயிரத்தில் ஒருவன் 2', 'புதுப்பேட்டை 2', வெற்றிமாறன் இயக்கத்தில் 'வட சென்னை 2' போன்ற படங்களும் வரிசையில் இருக்கும் நிலையில், 'வடசென்னை 2' குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகாமல் இருந்தது.
இதனிடையே நேற்று 'விடுதலை' படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்ற நிலையில், இப்படத்தின் இயக்குநர் வெற்றிமாறன், நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி, இசையமைப்பாளர் இளையராஜா உட்பட பல பிரபலங்களும் ரசிகர்களும் கலந்துகொண்டனர்.

அப்போது, 'வட சென்னை 2' அப்டேட் கேட்டு ரசிகர்கள் அரங்கத்தையே அதிரவைத்தனர். ரசிகர்களின் இந்த எதிர்பார்ப்பைப் புரிந்துகொண்ட வெற்றிமாறன், 'வட சென்னை 2' படத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.
அப்போது பேசிய வெற்றிமாறன், 'விடுதலை' படத்தின் இரண்டு பாகங்கள் ரிலீஸ் ஆன பின், சூர்யா நடிப்பில் 'வாடிவாசல்' படத்தை இயக்க உள்ளதாகவும், அப்படத்தை முடித்ததும், 'வட சென்னை 2' படத்தின் ஷூட்டிங்கை தொடங்குவேன் என தெரிவித்துள்ளர்.
வெற்றிமாறனின் இந்த அப்டேட்டால், அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் உற்சாகத்தில் உள்ளனர்.