காத்திருந்த காதலைக் கூறும் ‘பரிவர்த்தனை’

காத்திருந்த காதலைக் கூறும் ‘பரிவர்த்தனை’

வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு நடிகர், நடிகைகள் பலரும் நடிக்க வரும் காலகட்டம் போய், தற்போது சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு நடிகர், நடிகைகள் நடிக்கச் சென்று கொண்டு இருக்கின்றனர். அதுபோன்ற ஒரு படம்தான் இயக்குநர் மணிபாரதி இயக்கத்தில் வெளிவரவிருக்கும், ‘பரிவர்த்தனை’ திரைப்படம். வெத்துவேட்டு, தி பெட் ஆகிய படங்களைத் தொடர்ந்து, எஸ்.மணிபாரதி திரைக்கதை எழுதி, இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

MSV புரொடக் ஷன்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் பொறி.செந்திவேல் கதை, வசனம் எழுதி தயாரித்துள்ள இந்தப் படத்துக்குத்தான், ‘பரிவர்த்தனை’ என்று வித்தியாசமாக பெயர் வைத்துள்ளனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், ‘நம்ம வீட்டு பொண்ணு’ தொடரின் நாயகன் சுர்ஜித் இந்தப் படத்தின் கதாநாயகனாகவும், ‘ஈரமான ரோஜாவே’ தொடரில் நாயகியாக நடித்து வரும் சுவாதி இந்தப் படத்தின் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்கள் தவிர, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ தொடரில் நடித்துள்ள ராஜேஸ்வரி மற்றும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும், ‘அன்பே வா’ தொடரின் வில்லன் பாரதி மோகன் ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் இவர்களோடு இளம் வயது நடிகர், நடிகைகளான விக்ரம் ஆனந்த், மாஸ்டர் விதுன் மற்றும் சுமேகா, ஹாசினி போன்றோரும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ரயில் கார்த்தி, திவ்யா ஸ்ரீதர், பாரதி, மேனகா, சுண்ணாம்பு செந்தில், வெற்றி நிலவன், கார் செல்வா ஆகியோரும் நடித்துள்ளனர். இணை இயக்குநராக வி.இளமாறன் பணியாற்றியுள்ளார். ஒளிப்பதிவு K. கோகுல், இசை ரஷாந்த் அர்வின், நடனம் தீனா, எடிட்டிங் பன்னீர் செல்வம்.

இந்தத் திரைப்படம் குறித்து இயக்குநர் மணிபாரதியிடம் கேட்டபோது, “காத்திருந்தால் காலம் கடந்தாலும் காதல் கைகூடும் என்ற கருத்தை மையமாக வைத்து முழுக்க முழுக்க இளமை ததும்பும் காதல் கதையாக இந்தப் படத்தை உருவாக்கியுள்ளோம். இன்றைய டிஜிட்டல் வாழ்க்கை முறையில் எதை எதையோ பரிவர்த்தனை செய்கிறோம். அதுபோல, இந்த காதல் பரிவர்த்தனையும் அனைவராலும் ரசிக்கும்படியாக இருக்கும். முழு படத்தையும் திருச்சி மாவட்டம், துறையூர் வட்டத்தில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் இடமான புளியஞ்சோலையில் படமாக்கியிருக்கிறோம். இறுதிகட்ட பணியில் இருக்கும் இந்தத் திரைப்படம் விரைவில் வெள்ளித்திரையில் வெளியாக உள்ளது” என்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com